புதுடில்லி : “வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட முடியாது.
இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வெளியிட சாத்தியமில்லை’ என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக கோடி கோடியாக கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். கறுப்பு பணத்தை முடக்கியவர்கள் விவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கூறி, முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத் மலானி, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கே.பி.எஸ்.கில் உட்பட ஆறு பேர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி பி.சுதர்சன்ரெட்டி தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் எவ்வளவு, அதை முடக்கியவர்கள் யார், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தது. கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என நீதிபதி உறுதிபட தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. இதில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட தகவலை எடுத்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை முதலீடு செய்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை, வெளிநாடு அரசுகள் மூலம் மத்திய அரசு பெற்றுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. இதன்படி விவரங்களை வெளியிட கூடாது என்ற உறுதிமொழியின் மூலம் பெறப்பட்டதால், இவற்றை வெளியிடுவதற்கு சாத்தியம் இல்லை.வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டு, கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதில் அரசுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. இந்த வகையில் ஜெர்மனி நாட்டிலுள்ள லீச்செஸ்டீன் முதலீடு செய்துள்ள ஆறு பேர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் பற்றிய விவரத்தை வெளியிட அரசு முன்வந்துள்ளது.சில நபர்கள் மீது நாங்கள் சட்டப்பூர்வ விசாரணையை துவக்க இருக்கிறோம். அவர்களை பற்றிய தகவல்களை வெளியிடுவதில் பிரச்னை இல்லை. மற்றவர்களை பொறுத்தமட்டில் விசாரணை துவங்காதபோது தகவல்களை வெளியிட முடியாது.இவ்வாறு கோபால் சுப்ரமணியம் கூறினார்.
சொலிசிட்டர் ஜெனரலின் பதிலில் திருப்தியடையாத நீதிபதி, “அடுத்த விசாரணையின் போது வெளியிட முடியுமா’ என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த கோபால் சுப்ரமணியம், “அரசு தகவல்களை பெற்றுள்ளது இருப்பினும், அதை பகிரங்கமாக வெளியிட முடியாத நிலையில் உள்ளது’ என்றார்.
Leave a Reply