பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமச்சீர் கல்வி, 10ம் வகுப்பு புத்தகங்கள், சர்வர் பிரச்னை காரணமாக, “ஓப்பன்’ ஆகாததால், இந்த இணையதளத்தில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, “லிங்க்’ கொடுத்துள்ளனர்.
அந்நிறுவனங்கள், விரைவாக, “டவுண்லோட்’ செய்ய வசதியை ஏற்படுத்திக் கொடுத்து, கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
வரும் கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, விரைவில் முடிந்து, மே இறுதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும் என்றாலும், 10ம் வகுப்பிற்கான பாடப் புத்தகங்களை மட்டும் முன்கூட்டியே பார்க்க வேண்டும், பாட விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது. பிரபலமான தனியார் பள்ளிகள், முன்கூட்டியே, 10ம் வகுப்பு பாடத்திட்டங்களை நடத்தவும் முயற்சித்து வருகின்றன. இதில், பல பள்ளிகள், பாடத்திட்ட தயாரிப்பு குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து,”சிடி’யை வாங்கி, அதன் மூலம் பாடப் புத்தகங்களை, “பிரின்ட்’ போட்டு பயன்படுத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்கு முன்கூட்டியே தேவை அதிகரித்ததை மனதில் கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் அனைத்து பாடப் புத்தகங்களும், கடந்த 21ம் தேதி காலை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் (தீதீதீ.ணீச்டூடூடிடுச்டூதிடி.டிண) வெளியிடப்பட்டன. வெளியிட்ட சில மணி நேரங்களில், மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தை பார்வையிட்டதால், இணையதளம் செயலிழந்து முடங்கியது. “சர்வர்’ பிரச்னை காரணமாக, பாடப் புத்தகங்களை, “டவுண்லோட்’ செய்ய முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர். இப்பிரச்னையை சரி செய்ய, பள்ளிக் கல்வித்துறை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்கு மாறாக, இந்த சேவையை, தனியார் வெப்சைட் நிறுவனங்கள் வழங்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை வெப்சைட்டில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, “லிங்க்’ தரப்பட்டுள்ளன. பாடங்களை, “கிளிக்’ செய்தால், தனியார் வெப்சைட்கள், “லிங்க்’ கிடைக்கின்றன. அவற்றில், இரண்டு வகையான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று, இலவசமாக, “டவுண்லோட்’ செய்யும் வசதி. மற்றொன்று, கட்டணம் செலுத்தி, “டவுண்லோட்’ செய்து கொள்வது. இலவசமாக பாடப் புத்தகங்களை காப்பி செய்ய வேண்டுமெனில், அதற்கு அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். ஆனால், கட்டணப் பிரிவில், மிக விரைவாக, 30 வினாடிகள் முதல், 8 நிமிடங்கள் வரை, “டவுண்லோட்’ செய்யலாம் என்றும் அறிவித்துள்ளனர். இலவசமாக, “டவுண்லோட்’ செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்பதால், ஏராளமான மாணவர்கள், கட்டண பிரிவை பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சேவையை, தனியார் வெப்சைட்கள் பணம் சம்பாதிக்க, பள்ளிக் கல்வித்துறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதிகாரிகள் மழுப்பல்: இலவசமாக வழங்க வேண்டிய சேவையை, தனியார் வெப்சைட் நிறுவனங்கள் காசு பார்க்க வழி செய்திருப்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் நேற்று விசாரித்ததில், “உதவி இயக்குனர் இருதயசாமி தான், இணையதளத்திற்கு பொறுப்பு; அவரிடம் கேளுங்கள்’ என்றனர். அவரோ, “நான், பெற்றோர்- ஆசிரியர் கழக செயலர் பணியிடத்திற்கு தான் பொறுப்பு. இணையதளத்திற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. துணை இயக்குனர் சந்திரசேகரன் தான், அதற்கு பொறுப்பு; அவரைக் கேளுங்கள்’ என்றார். அவர், “நான் இ-கவர்னன்ஸ் துணை இயக்குனர். பள்ளிக்கல்வி இணையதளத்தில் பாடப் புத்தகம் வெளியிட்டதே எனக்குத் தெரியாது. உயர் அதிகாரிகளைக் கேளுங்கள்’ என்றார். பள்ளிக் கல்வி இயக்குனர் வசுந்தரா தேவி (பொறுப்பு), செயலர் கூட்டத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
Leave a Reply