விருதுநகர்: “”காமராஜர் இறந்த போது அவரிடம் இருந்தது நான்கு கதர் வேட்டி, சட்டை, 350 ரூபாய் மட்டுமே. இன்று அமைச்சர்களின் சொத்து பல கோடி ரூபாய்,” என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
இவர் ஆர்.ஆர்.நகர், கன்னிசேரி புதூர், மத்தியசேனை, ஆமத்தூர், விருதுநகர் பகுதிகளில், அக்கட்சி வேட்பாளர் பாண்டியராஜனை ஆதரித்து, காலை 11.50 மணிக்கு பேசியதாவது: விருதுநகர் என்றவுடன், எனக்கு சின்ன வயசு ஞாபகம் வருகிறது. அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம், என் பெற்றோர் பிறந்த ஊர். எனக்கு இது சொந்த மாவட்டம், அங்கிருந்து விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு, மாட்டு வண்டியில் வந்துள்ளேன். கல்விக்கண் கொடுத்த காமராஜர் பிறந்த ஊர். தி.மு.க.,வை தாக்குகிறேன் என்கின்றனர். ஆளும்கட்சியைத் தான் தாக்க முடியும். எனக்கும், அவர்களுக்கும், வாய்க்கால் வரப்பு சண்டையா, பெண் கொடுத்து, பெண் எடுப்பதில் தகராறா? இல்லையே; மக்களுக்கு நல்லது செய்யச் சொல்கிறேன்.
இங்குள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கலெக்டரை அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கச் சொல்கிறார். பின்னால் இருந்து தமிழிலும், தெலுங்கிலும் பேசி ஆளுக்கு நூறு ரூபாய் வழங்குகிறார்.ஆளுக்கு 1,000 ரூபாய் கூட கொடுக்கலாம். உழைத்து சம்பாதித்து, கொடுக்க வேண்டும்; அந்த பணம் எல்லாம் உங்களிடம் அடித்து சம்பாதித்தது.
கொள்ளையடித்து சினிமா தியேட்டர், சாத்தூர், அருப்புக்கோட்டையில் மில் கட்டியுள்ளார். நல்லவர் போல் வேஷம் போடுகிறார். இவருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., என இன்ஷியல் கொடுத்தது எம்.ஜி.ஆர்., தான். இங்கு, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளை பட்டினி போட்டு, கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்.
ஆர்.ஆர்.நகரிலிருந்து கன்னிசேரி, மத்தியசேனை வரையுள்ள ரோடுகள் மோசமாக உள்ளன. இங்குள்ள அமைச்சர், இந்த ரோடுகளில் ஸ்டாலின், கருணாநிதியை அழைத்து வருவாரா? அவர்களிடம், “உங்கள் ஆட்சியின் லட்சணம் இது’ என சொல்வாரா? மாணிக்தாகூர் எம்.பி., இரண்டு ஆண்டுகளாக என்ன செய்துள்ளார்? ரியாக்ஷன் ஏதாவது உண்டா?
காங்., கட்சி வெள்ளையர்களிடம் சுதந்திரம் பெறுவதற்காக துவக்கப்பட்ட கட்சி; ஆனால், இன்று சுதந்திரம் பறிபோவதற்கு துணை நிற்கிறது. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வருகிறது. கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க., கூட்டணிக்கு அமோக வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். கூட்டணியை எப்படியாவது உடைக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். நான் பயப்படுவது தெய்வத்திற்கும், மனசாட்சிக்கும் தான். என்னை, மக்களிடம் இருந்து பிரிக்க தி.மு.க., பணத்தை கொடுக்கிறது. நான் ஆயிரம் கோடி மக்களின் மனசைத் தான் நம்பியுள்ளேன். காமராஜர் இறக்கும் போது நான்கு கதர் வேட்டி, சட்டையும், 350 ரூபாயும் தான் அவரது சொத்து. இன்று அமைச்சர்கள் பல கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். மாரியாத்தா மனசு வைத்தா எல்லாம் நடக்கும். விருதுநகர் தொகுதிக்கு நல்ல வேட்பாளர் பாண்டியராஜனை தான் கொடுத்துள்ளேன். அவருக்கு முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
பின்னர், திருச்சுழி அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக வேட்பாளர் இசக்கி முத்துவுக்கும், அருப்புக்கோட்டை அ.தி.மு.க., வேட்பாளர் வைகைச்செல்வனுக்கும் இரட்டை இலைக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பிரசார துளிகள்* கூட்டத்தில் இருந்த தே.மு.தி.க., தொண்டர்கள் “நடிகர் வடிவேலு, குஷ்பூ ஒழிக’ என கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
* நடிகர் விஜய் படம் பொறித்த கொடிகளுடன் ரசிகர்கள் வந்திருந்தனர்.
* விஜயகாந்த் பேசிய போது அங்கிருந்தவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்ததால், “உடல் நலமில்லாமல் வந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இடையூறு செய்யாமல் இருங்கள்’ என்றார்.
* பராசக்தி மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழாவிற்காக நீர் மோர் பந்தல் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. கட்சி தொண்டர்கள் இந்த பந்தலில் தாகத்தை தீர்த்துக் கொண்டனர்.
* விஜயகாந்த் முரசு கொட்டுவது போல் நடித்து ஓட்டுக் கேட்டார்.
Leave a Reply