டெல்லி: இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் ஜப்பான் கார் நிறுவனங்கள் , பிற நாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய சிறப்பு அனுமதி வழங்குமாறு, மத்திய அரசிடம் அநநாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி எதிரொலியால் ஜப்பானிலுள்ள கார் தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கார் உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கார் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்துக் கொள்ள இருப்பதாக மாருதி சுஸுகி, டொயோட்டோ, ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால், இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க, ஜப்பானை தவிர்த்து பிற நாடுகளிலிருந்து கார் உதிரிபாகங்களை இறக்குமதி செய்துகொள்வதற்கு ஜப்பான் கார் நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் ஜப்பான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய அரசின் விதிகளின்படி, உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு முன், அந்த உதிரிபாகங்களை இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கழகம்(ஏ.ஆர்.ஏ.ஐ.,), தேசிய ஆட்டோமோட்டிங் ஆராய்ச்சி மையம்(நேடிரிப்) மற்றும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம்(வி.ஆர்.டி.இ.,)ஆகியவை சோதனை செய்து அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால், இதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்குமாறு, ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் கார் நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட குழு விரைவில் இந்தியா வர உள்ளது. இதுகுறித்து மத்திய கனரக தொழிற்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,சிறப்பு அனுமதி வழங்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதேவேளை, ஜப்பான் அரசின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்,” என்றார்.
Leave a Reply