கொச்சி அணி “ஹாட்ரிக்’ வெற்றி *கோல்கட்டா பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இத்தொடரில் “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

பவுலிங்கில் அசத்திய போதும், பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், கோல்கட்டா அணி பரிதாப தோல்வியடைந்தது.
நான்காவது ஐ.பி.எல்., தொடரில், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 22வது லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற காம்பிர், பீல்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவுமில்லை. கொச்சி அணியில் இருந்து பெரேரா நீக்கப்பட்டு, முரளிதரன் சேர்க்கப்பட்டார்.
நல்ல துவக்கம்:
கொச்சி அணிக்கு பிரண்டன் மெக்கலம், கேப்டன் ஜெயவர்தனா இணைந்து, மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் தந்தனர். பிரட் லீயின் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சரை மெக்கலம் விளாச, ஜெயவர்தனா அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், மெக்கலம் (23) சாகிப் சுழலில் சிக்கினார்.
திடீர் சரிவு:
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜெயவர்தனாவை (25), யூசுப் பதான் தனது பவுலிங்கில் வெளியேற்றினார். பின் வந்த ஹாட்ஜ் (2), பார்த்திவ் படேல் (9) அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி தர, கொச்சி அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஜடேஜா அபாரம்:
அடுத்து ரவிந்திர ஜடேஜா, ஜாதவ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாலாஜி ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ஜாதவ் நம்பிக்கை தந்தார். மறுமுனையில் யூசுப் பதான், சாகிப் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார் ஜடேஜா.
குறைந்த ஸ்கோர்:
இந்நிலையில் ஜாதவ்(12), ஜடேஜா (29) அடுத்தடுத்து அவுட்டாக, ரன்வேகம் குறைந்தது. வினய் குமார் 11 ரன்கள் எடுத்தார். கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. கோமெஜ் 10, ரமேஷ் பவார் 3 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். சுழலில் அசத்திய யூசுப் பதான், சாகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
சொதப்பல் துவக்கம்:
எளிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு, காலிஸ் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காம்பிர் (3) நிலைக்கவில்லை. பிஸ்லாவும் 16 ரன்னுடன் திரும்ப, கோல்கட்டா அணி 37 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
திவாரி ஆறுதல்:
பின் திவாரி, மார்கன் இணைந்து ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் ஒரு ரன்னுக்காக ஆசைப்பட்டு, தேவையில்லாமல் ஓடிய மார்கன் (10), ஜெயவர்தனாவின் “சூப்பர் த்ரோவில்’ விக்கெட்டை பறிகொடுத்தார். சாகிப் அல் ஹசனும் (2) ஏமாற்றினார்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், திவாரி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவார் பந்தில் சிக்சர் அடித்த திவாரி, ஆர்.பி.சிங் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். ரூ. 9.66 கோடி கொடுத்து வாங்கப்பட்ட அதிரடி வீரர் யூசுப் பதான் (8), முக்கியமான நேரத்தில் அணியை கைவிட்டார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த திவாரியும் (46) அவுட்டாக, கோல்கட்டா அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. வினய் குமார் வீசிய முதல் நான்கு பந்தில் 5 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் ரஜத் பட்டியா (10) ரன் அவுட்டானார். கடைசி பந்தில் பாலாஜி ஒரு ரன் எடுக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு, 126 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இக்பால் அப்துல்லா (12), பாலாஜி (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஜெயவர்தனா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஸ்கோர்போர்டு
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
மெக்கலம்(கே)மார்கன்(ப)சாகிப் 23(19)
ஜெயவர்தனா-எல்.பி.டபிள்யு.,(ப)யூசுப் 25(27)
பார்த்திவ்-எல்.பி.டபிள்யு.,(ப)யூசுப் 9(11)
ஹாட்ஜ்(ப)யூசுப் 2(8)
ஜடேஜா(ப)யூசுப்(ப)பிரட் லீ 29(18)
ஜாதவ்(கே)சாகிப் 12(11)
கோமெஜ்-அவுட் இல்லை- 10(10)
வினய்(ப)சாகிப் 11(10)
பவார்-அவுட் இல்லை- 3(6)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 7 விக்.,) 132
விக்கெட் வீழ்ச்சி: 1-49(பிரண்டன் மெக்கலம்), 2-51(ஜெயவர்தனா), 3-55(ஹாட்ஜ்), 4-65(பார்த்திவ் படேல்), 5-100(ஜாதவ்), 6-105(ரவிந்திர ஜடேஜா), 7-127(வினய் குமார்).
பந்துவீச்சு: பிரட் லீ 4-0-33-1, பாலாஜி 4-0-23-0, இக்பால் அப்துல்லா 4-0-23-0, சாகிப் அல் ஹசன் 4-0-28-3, யூசுப் பதான் 4-1-20-3.
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
பிஸ்லா(ப)ஜடேஜா 16(14)
காலிஸ்(கே)ஜாதவ்(ப)வினய் 6(9)
காம்பிர்(ப)ஆர்.பி.சிங் 3(5)
திவாரி(ஸ்டம்டு)பார்த்திவ்(ப)ஜடேஜா 46(51)
மார்கன்-ரன் அவுட்(ஜெயவர்தனா) 10(12)
சாகிப்(ப)ஆர்.பி.சிங் 2(5)
யூசுப்(கே)முரளிதரன்(ப)பவார் 8(3)
பட்டியா–ரன் அவுட்(பார்த்திவ்/ஜடேஜா) 10(8)
பிரட் லீ(கே)ஜாதவ்(ப)முரளிதரன் 1(3)
இக்பால்-அவுட் இல்லை- 12(9)
பாலாஜி-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 11
மொத்தம் (20 ஓவரில் 9 விக்.,) 126
விக்கெட் வீழ்ச்சி: 1-24(காலிஸ்), 2-27(காம்பிர்), 3-37(பிஸ்லா), 4-73(மார்கன்), 5-86(சாகிப் அல் ஹசன்), 6-97(யூசுப் பதான்), 7-101(திவாரி), 8-105(பிரட் லீ), 9-125(பட்டியா).
பந்துவீச்சு: ஆர்.பி.சிங் 4-0-25-2, வினய் குமார் 4-0-21-1, ரவிந்திர ஜடேஜா 4-0-25-2, ரமேஷ் பவார் 4-0-29-1, முரளிதரன் 4-0-18-1.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *