திருநெல்வேலி : கோடைவிடுமுறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2க்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் போலீசார் மூலம் பள்ளிகள் இழுத்துமூடப்படும் என, நெல்லை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் கோடை விடுமுறை காலத்திலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். அத்தகைய பெற்றோர்களிடம், மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிலர், கலெக்டரிடம் புகார் செய்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில், கோடை விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதால், மாணவர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள் என்பதில் பெற்றோர்களுக்கு நம்பிக்கையில்லை. மேலும் சிலர் வெளியூர்களுக்கோ, சொந்த ஊர்களுக்கோ கோடை விடுமுறை நாட்களில் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, கோடை விடுமுறையில் யாரும் வகுப்புகள் நடத்தக்கூடாது என, தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அறிவிப்புகள் விடப்பட்டுள்ளன. மீறி நடத்தினால் அந்த பள்ளிகளுக்கு போலீசார் வந்து, வகுப்பறைகளை இழுத்து மூடுவார்கள் என, எச்சரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Leave a Reply