புளியங்குடி: தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டாஸ்மாக் கடைகளை தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களைப் போல் 5 நாட்கள் மூடலாமா என தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திடம் கருத்து கேட்டுள்ளது.
இதையடுத்து இது குறித்து கடை மேற்பார்வையாளர்களின் கருத்தரிய மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மக் அலுவலகங்களில் இன்று அவரச கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 13-ம் தேதி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வழக்கம் போல் டாஸ்மாக் நிர்வாகம் வரும் 11-ம் தேதி மாலை 5 மணி முதல் தேர்தல் நாளான 13-ம் தேதி மாலை வரை மாநிலம் முழுவதும் உள்ள 6200 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மதுகடைகளுக்கு 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க முன்கூட்டியே வரும் 8-ம் தேதி முதல் டாஸ்மக் கடைகளை அடைக்கலாமா, அதனால் முன்கூட்டியே அதிகரிக்கும் மதுவிற்பனைக்கு ஏற்றப்போல் சரக்கு இருப்பு உள்ளதா, இதனால் ஏற்படும் பாதகஙகள் என்னென்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திடம் தகவல் கேட்டுள்ளது.
இதையடுத்து இன்று(6ம் தேதி) மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் மேலாளர் தலைமையில் கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்தின் அடிப்படையில் மாவட்ட, மண்டல டாஸ்மாக் அதிகாரிகள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அளிப்பார்கள். அதைப் வைத்து தான் வரும் 8-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா, அல்லது 11-ம் தேதி முதல் மூடப்படுமா என்பது குறித்து மாநிலம் நிர்வாகம் முடிவெடுக்கும்.
Leave a Reply