சென்னை : ஆபரணத் தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 168 ரூபாய் வரை அதிகரித்து, 16 ஆயிரத்து 192 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,024 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஒரு ஆண்டில், சவரனுக்கு 3,808 ரூபாய் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தை சரிவு, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, “ராக்கெட்” வேகத்தில் தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. இதனால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை மறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆபரணத் தங்கம் கடந்த சில மாதங்களாக விலை சிறிது குறைவதும், ஏறுவதுமாக இருக்கிறது. கடந்த மார்ச் 19ம் தேதி சவரன் 15 ஆயிரத்து 264 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,908 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த 15ம் தேதி சவரன் 15 ஆயிரத்து 928 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,991 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சவரன் 16 ஆயிரத்து 24 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,003 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை நிலவரப்படி, சவரனுக்கு 152 ரூபாய் வரை அதிகரித்து, 16 ஆயிரத்து 176 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,022 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் சவரனுக்கு மேலும் 16 ரூபாய் அதிகரித்து, 16 ஆயிரத்து 192 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,024 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 168 ரூபாய் வரை அதிகரித்தது.
கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சவரன் 12 ஆயிரத்து 384 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,548 ரூபாய்க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் சவரனுக்கு 3,808 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி சவரன் 15 ஆயிரத்து 264 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,908 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஒரு மாதத்தில் சவரனுக்கு 928 ரூபாய் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மொத்த தங்க நகை வியாபாரிகள் கூறும்போது, “கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் வெளிநாடுகளில் அன்னிய செலாவணி குவிகிறது. அதேநேரத்தில், டாலர் மற்றும் கரன்சியின் மதிப்பு தொடர் வீழ்ச்சியால் தங்கத்தின் மீது அவர்கள் முதலீடு செய்யத் துவங்கிவிட்டனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விலை எகிறி வருகிறது. இன்னும் சில நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும்’ என்றார்.
Leave a Reply