தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் சிறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் மின்தடை நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மின் தடையால் பெரும் இழப்பை சந்தித்து வரும் சிறு, குறு தொழிலதிபர்கள், பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின் உற்பத்தியை விட, மின் நுகர்வு கூடுதலாக இருப்பதால், மூன்று மாதத்துக்கு முன், 9,500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, தற்போது, 11 ஆயிரத்து, 300 முதல், 11 ஆயிரத்து, 500 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. 1,700 முதல், 2,000 மெகாவாட் வரை, மின் பற்றாக்குறை உள்ளது.பற்றாக்குறையை சமாளிக்க, வீடுகளுக்கு மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. 20 சதவீதமாக இருந்த தொழிற்சாலைக்கான மின்வெட்டு, ஏப்., 1ம் தேதி முதல், 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழிற்சாலைகளை பொறுத்தவரை, 150 எச்.பி., மின்சாரத்துக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு, உயரழுத்த மின் இணைப்பும் (எச்.டி.), அதற்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு, தாழ்வழுத்த மின் இணைப்பும் வழங்கப்படுகிறது.சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், வீடுகளுக்கு பெரும்பாலும் தாழ்வழுத்த மின் இணைப்புகளே (எல்.டி.,) வழங்கப்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகள், சிறு தொழிற்சாலைகளின் ஒரு பகுதியினர் மட்டுமே, உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளனர். மின் பற்றாக்குறையை சமாளிக்க சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டர்களை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில், 2011 ஏப்ரல் முதல், தாழ்வழுத்த மின் நுகர்வோர், ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும், 10 பைசா வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்த நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்யும் பட்சத்தில், யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி செலுத்த வேண்டும்.அரசின் இந்த உத்தரவு சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமின்றி, மின்கழக அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிலவகை ஜெனரேட்டர்களிலேயே மீட்டர் உள்ளது. ஒரு சில ஜெனரேட்டர்களுக்கு தனியாக மீட்டர் உள்ளது. மேலும், தனியார் ஜெனரேட்டர், மீட்டரில் காட்டும் யூனிட்கள் சரிதான் என்பதை, உறுதியாக கூற முடியாது. குளறுபடி நடக்க வாய்ப்புள்ளது. வீடுகளில் மின்தடை நேரத்தில், சிறிய ஜென்செட்கள் உபயோகிக்கின்றனர். அதை கண்டுபிடித்து வரி போடுவதும், சிரமமான காரியம்.
மின் வினியோக கழகத்தின் மூலம் வசூலிக்கப்படும் இந்த வரி, அரசுக்கு முழுமையாக செலுத்த வேண்டும். அதனால், கழகத்துக்கு எந்தவித உபயோகமும் இல்லாததால், மின் வினியோக கழகம் வரி வசூலில் எந்த அளவுக்கு தீவிரம் காட்டும் என, தெரியவில்லை. மேலும், வரி வசூலிக்க வழங்கியுள்ள வழிகாட்டு குறிப்புகளும், தெளிவாக இல்லாததால், மின்வினியோக கழக அதிகாரிகளும், குழப்பத்தில் உள்ளனர். கடந்த, 25 ஆண்டுக்கு முன் தொழிற்சாலைகள் உபயோகிக்கும் ஜெனரேட்டர் மின்சாரத்துக்கு, வரி வசூல் செய்யப்பட்டது. அதை எதிர்த்து, எச்.டி., மற்றும் எல்.டி., இணைப்பு நுகர்வோர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், எல்.டி., இணைப்பு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் மீண்டும் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் எச்.டி., இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் ஜெனரேட்டர்களுக்கு, வரி வசூலிப்பது தொடர்பாக, வாரியத்துக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை.ஏற்கனவே மின் தடையால், சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது, உபயோகிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமலுக்கு வருமா ஜெனரேட்டர் வரி?எல்.டி., இணைப்பு நுகர்வோர், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு வரி வசூலிப்பது தொடர்பாக, மின்வினியோக கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்று ஆண்டாக மின் பற்றாக்குறையால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர்கள் வரியை எதிர்க்கக் கூடும் என்பதால், ஜெனரேட்டர் மின் உற்பத்தி வரி வசூலிப்பு அமலுக்கு வருமா, கைவிடப்படுமா என்பது, வரும் நாட்களில் தெரிய வரும்.
Leave a Reply