நல்ஹட்டி : “மேற்கு வங்க மாநிலத்தை இடதுசாரிகளின் தவறான ஆட்சியில் இருந்து விடுவிக்க திரிணமுல், காங்கிரஸ் கூட்டணி உறுதி எடுத்துள்ளது’ என, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா நேற்று கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், நல்ஹட்டி சட்டசபை தொகுதியில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக, நேற்று, இத்தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் சோனியா பேசியதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவித வளர்ச்சி பணியும் காணப்படவில்லை. பணம் எங்கே சென்றது. மாநிலத்தின் இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு. இடதுசாரி அரசு தான் இதற்கு பொறுப்பு. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை அரசு. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து விட்டது.
காங்கிரஸ் கட்சியுடன் மம்தா தலைமையிலான திரிணமுல் கட்சி வலுவாக கூட்டணி அமைத்துள்ளது. 34 ஆண்டு கால, இடதுசாரி ஆட்சியில் இருந்து, மாநிலத்தை விடுவிக்க திரிணமுல் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் உறுதி எடுத்துள்ளது. மாநிலத்தில் வேலை கலாசாரம் மிகவும் தரக்குறைவாக உள்ளது. இதேபோல், விவசாயிகள், தொழிற்சாலை ஊழியர்கள் பரிதாபமான நிலையில் உள்ளனர். அமைப்புசாரா தொழில் நிறுவனங்களில் வளர்ச்சி இல்லை. மாவோயிஸ்ட் பாதிப்பு உள்ள இடங்களில் முழுமையான வளர்ச்சி திட்டம் இருக்க வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.
இவரை தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “காங்கிரஸ், திரிணமுல் கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும். வெற்றி பெற செய்தால், மாநிலத்தின் அனைத்து தரப்பிலும் இக்கூட்டணி வளர்ச்சியை கொண்டு வரும்’ என்றார்.
இம்மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், இரண்டாவது முறையாக, நேற்று, சோனியா கலந்து கொண்டார். நேற்றைய கூட்டத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே சோனியா பேசினார்.
Leave a Reply