டெல்லி: கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக திகழும் மாருதி நிறுவனம், விற்பனையில் பல புதிய மைல்கற்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் கார் விற்பனை 25 சதவீதம் உயர்ந்ததாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கடந்த நிதியாண்டில் 12,71,005 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டு கார் விற்பனையை (10,18,365 கார்கள்)ஒப்பிடும்போது, 24.81 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
இதேபோன்று, கடந்த மார்ச் மாதம் உள்நாட்டில் 1,10,424 கார்கள் விற்பனையானது. இது, சென்ற ஆண்டு மார்ச் மாத விற்பனையை ( 79,530 கார்கள்) 38.85 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதேவேளை, கடந்த மார்ச் மாத ஏற்றுமதி 26 சதவீதம் சரிவடைந்தது. கடந்த மார்ச்சில் 11,528 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே கடந்த ஆண்டு மார்ச்சில் 15,593 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply