ஜப்பானிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதிக்கு தடை! – மத்திய அரசு

posted in: உலகம் | 0

டெல்லி: கதிர்வீச்சு அச்சம் காரணமாக, ஜப்பானின் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா 3 மாத கால தடை விதித்துள்ளது.

நில நடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மத்திய ஜப்பானில் ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தைப் பாதுகாக்க 4 வாரமாக நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா இந்தத் தடையை விதித்துள்ளது.

ஜப்பானிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. 3 மாத காலம் இந்தத் தடை அமலில் இருக்கும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு ஜப்பானின் இதர பகுதிகளிலும் பரவலாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் விரிவான விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிலிருந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சிறிய அளவில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

அணு மின்நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து பால் பொருட்கள், மீன், இறைச்சிப் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. நிறைய நாடுகள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *