சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 3,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,598 ஆக இருந்தது. 1 பவுன் விலை ரூ.12,784 ஆக இருந்தது.
இந் நிலையில் இன்று ஒரு கிராம் விலை 2,010 ஆக உயர்ந்துள்ளது. 1 பவுன் தங்கம் விலை ரூ.16,080 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 1921ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 21 ஆக இருந்தது.
2000ம் ஆண்டில் ரூ.3,320 ஆனது. 2002ல் ரூ.3,368, 2003 முதல் 2005ம் ஆண்டு வரை ரூ.4,000க்குள் இருந்தது.
2006ம் ஆண்டு ரூ.6,160, 2007ம் ஆண்டு ரூ.7,076, 2008ம் ஆண்டு ரூ.8,072 என இருந்த தங்கத்தின் விலை, 2009ம் ஆண்டு ஜனவரியில் முதல் முறையாக ஒரு பவுன் ரூ.10,000த்தைத் தாண்டியது. அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது ரூ.11,232 ஆனது.
2010ம் ஆண்டு ஜனவரியில் தங்கம் விலை பவுன் ரூ.12,104 ஆனது. ஜுன் மாதம் ரூ.14,000த்தைத் தாண்டியது. கடந்த டிசம்பர் மாதத்தில் விலை ரூ.15,000த்தைத் தாண்டியது.
இந் நிலையில் நேற்று மாலை தங்கம் வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.16,080யை எட்டியது. அதாவது ஒரு கிராம் ரூ.2,010 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் ஒரே ஆண்டில் ரூ.3,000 வரை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
வரக்கூடிய மாதங்கள் முகூர்த்த மாதங்கள் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே தெரிகிறது. மேலும் வரும் 20ம் தேதிக்கு மேல் திருமண சீசன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி அட்சய திரிதியை நாள் வருகிறது. இந்த காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
லிபியா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து அரபு நாடுகளில் சர்வதேச நிதிச் சந்தைகளுக்குப் பதில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவகிறது.
மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
Leave a Reply