சென்னை: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விற்பனையில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்களை, குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்போதும், தனியார் பள்ளிகள் தேவையான புத்தகங்களை வாங்கி, ஐந்து மடங்கு அளவுக்கு விலையை உயர்த்தி பெரும் கொள்ளை அடிக்கின்றன.
இதை வரும் கல்வியாண்டில் தடுத்து நிறுத்தும் வகையில், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் அரசே நேரடியாக புத்தகங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
மீதமுள்ள வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் அமலுக்கு வருகிறது. பாடப் புத்தகங்கள் மும்முரமாக அச்சிடப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு வகுப்புக்கான பாடப் புத்தகங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. விலை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. நடப்பாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு முறையே 200, 250 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டும், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வசூலித்தனர்.
இது தொடர்பாக, தனியார் பள்ளிகளில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் ஒருவரும் முன்வரவில்லை. பாடப் புத்தகங்கள் மூலமாக, தனியார் பள்ளிகள் பகல் கொள்ளை அடிப்பதை தடுக்க, மாவட்ட வாரியாக கல்வித்துறை அலுவலகங்கள் மூலம் அரசே புத்தகங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மாநிலம் முழுவதும் 65 மாவட்ட கல்வி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. 32 முதன்மைக் கல்வி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த 97 அலுவலகங்கள் மற்றும் பாடநூல் கழகத்திற்கு சொந்தமான குடோன்கள் ஆகிய இடங்களில், பாடப் புத்தகங்களை அரசே விற்பனை செய்ய முன்வர வேண்டும். அரசு உருவாக்கிய பாடத்திட்டம் மற்றும் தனியார் பதிப்பகங்கள் உருவாக்கிய பாடத்திட்டம் ஆகிய இரண்டில், விருப்பமான பாடத்திட்டத்தை தனியார் பள்ளிகள் தேர்வுசெய்து கொள்ளலாம் என சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
பெரிய தனியார் பள்ளிகள், வழக்கம்போல் தனியார் பதிப்பகங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்க திட்டமிட்டுள்ளன.
சாதாரண, நடுத்தர அளவில் உள்ள தனியார் பள்ளிகள் மட்டுமே அரசு பாடத்திட்டங்களை அமல்படுத்துகின்றன. ஆனாலும், பாடப் புத்தகங்களை மொத்தமாக அவர்கள் வாங்கிவந்து, அதிக விலைக்கு மாணவர்கள் தலையில் கட்டுகின்றனர். நடப்பு கல்வியாண்டில் இதுதான் நடந்தது. இதை வரும் கல்வியாண்டில் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு.
பத்தாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்கள் கொண்ட “ஒரு செட்” புத்தகத்திற்கு 300 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி ஆகிய இரண்டு புத்தகங்களுக்கும் இந்த விலை பொருந்தும். ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையான பாடப்புத்தகங்கள் 200 ரூபாய்க்கும், ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை இணையதளத்தில் 10ம் வகுப்பு பாடத்திட்டங்கள் நேற்று காலை(21-04-11) வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தை பார்வையிட முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. வரும் ஜூன் மாதம் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களுக்கும் புதிய பாடத் திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது.
இதில் 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களை முன்கூட்டியே வாங்கி படிப்பதற்கு, மாணவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல தனியார் பள்ளிகளும், 10ம் வகுப்பு பாடத்தை முன்னதாகவே துவக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளன. பாடப் புத்தகங்கள் அடுத்த மாதம் இறுதியில் தான் கிடைக்கும் என்பதால், 10ம் வகுப்பிற்கான பாடப் புத்தகங்களை மட்டும் நேற்று(21-04-11) கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டனர்.
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியிலான பாடப் புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் இணையதளத்தை பார்வையிட முயன்றதால் “சர்வர்” கோளாறு காரணமாக, இணையதளம் முடங்கியது. பாடப் புத்தகங்களை பார்க்க முடியாமல் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டனர்.
Leave a Reply