தமிழகத்தைப் போல புதுச்சேரியில் இலவசங்கள் “தாராளம்’ : காங்., சார்பில் இலவச பிரிட்ஜ்

posted in: அரசியல் | 0

புதுச்சேரி : அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக பிரிட்ஜ் அல்லது வாட்டர் பியூரிபையர் வழங்கப்படும் என, காங்., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, காங்.,தேர்தல் அறிக்கையை, மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பெற்று, 40 தொகுதிகள் பெற வழி செய்வோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக மொபைல் போன் வழங்கப்படும். குடும்பத் தலைவரை இழந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்பு நிதி 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய், மருத்துவ மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஏழை கல்லூரி மாணவர்கள் லேப்- டாப் வாங்க, 50 சதவீத மான்யம் வழங்கப்படும்.

மாணவர் பஸ் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, இலவச பாஸ் வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும், மளிகைப் பொருட்கள் வாங்க ஆண்டுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும். அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக, பிரிட்ஜ் அல்லது குடிநீர் சுத்தப்படுத்தும் கருவி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி 4 லட்சம் ரூபாய் வழங்கி, கடன் தொகையில் 50 சதவீத மான்யம் வழங்கப்படும். ஏழை விவசாயிகள் மினி மாட்டுப் பண்ணை அமைக்க இரண்டரை லட்சம் ரூபாய் மான்யமாக வழங்கப்படும். முதியோர் உதவித் தொகை 750 ரூபாயிலிருந்து, 1000 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு பஸ்களில் பயணிக்க, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். எம்.பி.பி.எஸ்., பி.டெக்., போன்ற தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக இன்டர்நெட் வசதியுடன் கூடிய லேப்- டாப் வழங்கப்படும்.

பள்ளி இடைநிற்றலைத் தடுக்க, பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை ஊக்கத் தொகை 500 ரூபாய் அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும். விதவை தாய்மார்களின் மகள்கள் திருமண உதவித்தொகை 15 ஆயிரத்திலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். உடல் ஊனமுற்றோரை திருமணம் செய்யும் போது, அத் தம்பதியருக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் இன மக்கள் வீடு கட்டிக்கொள்ள மான்யம் 2 லட்சத்திலிருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *