தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு தங்கள் பெயர், தெரு, ஊர் பெயர், வாக்களிக்க வேண்டிய வாக்கு சாவடிகள் போன்ற விவரங்களுடன் பூத் சிலிப்புகள் வழங்கப்படும். இந்த பூத் சிலிப்பை பார்த்து தான் ஓட்டுச் சாவடி அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஓட்டு போட அனுமதி வழங்குவார்கள்.
இதற்கு முன் நடந்த தேர்தல்களில் அரசியல் கட்சியினரே பூத் சிலிப்பை அச்சடித்து, வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கினார்கள். பூத் சிலிப்புடன் தங்கள் கட்சி சின்னத்தையும் சேர்த்து அச்சடித்து கொடுத்தனர். இதுவும் ஒருவகையான பிரசாரம் என்பதால் இந்த தேர்தலில் பூத் சிலிப்புகளை தேர்தல் பணியாளர்களே வீடு வீடாக சென்று வாக்காளர்ளுக்கு வழங்குவார்கள் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
தமிழ்நாடு முழுவதும் இதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் திருவள்ளூர், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பணியாளர்கள் பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கினர். இன்று சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது.
சென்னையில் 31 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக வில்லிவாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய 6 தொகுதிகளில் இன்று முதல் பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இந்தப் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும். இதில் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளுக்கான பூத் சிலிப்புகள் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப்பணிகள் முடிந்ததும் மற்ற தொகுதிகளுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கும்.
இந்த முறை பூத் சிலிப்புடன் வாக்காளர்களின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர், முகவரி, ஓட்டுச் சாவடி விவரங்களும் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் அரசியல் கட்சியினரும் வீடு வீடாக சின்னம் இல்லாமல் பூத் சிலிப் வழங்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- ஓட்டுப் பதிவுக்கு 3 நாளைக்கு முன் பூத் சிலிப் கிடைக்காதவர்கள் 1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே பூத் சிலிப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசியல் கட்சியினருக்கு எதிராக தேர்தல் கமிஷனே பூத் சிலிப் கொடுப்பதால் அரசியல் கட்சியினரின் உரிமையை பறித்துவிட்டதாக கருதுகின்றனர். அதனால் விருப்பம் இருந்தால் வழக்கம்போல் அரசியல் கட்சியினரும் சின்னம் இல்லாமல் பூத் சிலிப் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply