தவறாக நடந்து கொண்ட ஓட்டுனர் இடமாற்றம்போக்குவரத்து அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து

posted in: கோர்ட் | 0

சென்னை:தவறாக நடந்து கொண்டதாக ஓட்டுனரை இடமாற்றம் செய்து, போக்குவரத்து அதிகாரி பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.


நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:போக்குவரத்துக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஓட்டுனர் காமராஜின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. நடத்துனர் ஒருவரை தாக்கியுள்ளார். அவர் வேதாரண்யம் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். காமராஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள், தவறாக நடந்து கொண்டதன் அடிப்படையில் நாகையில் இருந்து சிதம்பரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ எனக் கூறப்பட்டுள்ளது.
தண்டனை அளிக்கும் விதத்தில் இடமாற்றம் உத்தரவை பிறப்பிக்க முடியாது என, ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, தவறாக நடந்து கொண்டார் என்கிற முகாந்திரத்தின்படி, மனுதாரரை இடமாற்றம் செய்ததை ஏற்க முடியாது; இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வேறு குற்றத்தில் மனுதாரர் ஈடுபட்டிருந்தால், சட்டப்படி மற்றும் நிலை விதிகளின்படி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஐகோர்ட்டில் காமராஜ் தாக்கல் செய்த மனு:
ஊதிய உயர்வு கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய போது, நான் பணிக்குச் சென்றேன்.

சமீபத்தில் நேதாஜி தொழிற்சங்கத்தில் சேர்ந்தேன். பழி வாங்கும் விதத்தில் என்னை நாகையில் இருந்து சிதம்பரத்துக்கு இடமாற்றம் செய்து, கும்பகோணம் டிவிஷன் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உத்தரவிட்டார்.
மருத்துவ விடுமுறையில் இருக்கும் போது, என்னை இடமாற்றம் செய்துள்ளனர். இது தவறு. விதிமுறைகளை பின்பற்றவில்லை. எந்த காரணமும் இல்லாமல் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நாகப்பட்டினம் கிளையில் தொடர்ந்து பணியாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *