தாமதமின்றி தங்கபாலுவை நீக்குங்கள் : சோனியாவிடம் சிதம்பரம் கோரிக்கை

posted in: அரசியல் | 0

நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார்.

இவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று சோனியாவிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கராத்தே தியாகராஜன், மங்கள்ராஜ், செங்கை செல்லப்பா என 19 பேரை தமிழக காங்கிரசில் இருந்து தங்கபாலு அதிரடியாக நீக்கம் செய்தார். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழக காங்கிரசில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

நீக்கப்பட்டவர்கள் பலரும் தங்கபாலுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சோனியாவை உடனடியாக சிதம்பரம் சந்தித்தார். டில்லியில் சோனியாவை சந்தித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், தங்கபாலுவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.

சோனியாவுடனான சிதம்பரத்தின் சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: சென்னையில் தங்கபாலு நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, காலதாமதம் ஏதுமின்றி உடனடியாக சிதம்பரம் களத்தில் இறங்கி சோனியாவை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என 19 பேர், தமிழக காங்கிரசில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க தன்னிச்சையாக தங்கபாலு செயல்பட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பு என்பது கூட தங்கபாலுவின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியிலேயேகூட தங்கபாலு பெரும் தோல்வியை சந்திப்பார் என்றே தகவல்கள் வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

தங்கபாலு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தன் இஷ்டத்திற்கு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவரது இந்த எதேச்சதிகார நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இவரது தலைமை தமிழகத்தில் தொடர்ந்தால், கட்சியின் எதிர்காலம் நிச்சயம் பாழாகிவிடும். அந்த அபாயத்திலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் உடனடியாக தங்கபாலுவை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சிதம்பரத்தின் புகாரை கேட்டுக் கொண்ட சோனியா, இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நமது டில்லி நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *