கும்பகோணம் & பண்ருட்டி: தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒட்டாமல் உள்ளன என்று
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதி இதுவரை மக்களுக்கு செய்த திட்டங்களுக்கும், செய்யபோகும் திட்டங்களுக்கும் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதனால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். எதிர் அணியினர் தாமரை இலை தண்ணீரும் போல உள்ளனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஜெயலலிதா தலைமையில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு விஜயகாந்த் செல்லவில்லை. இதுவே அவர்கள் கூட்டணி எவ்வாறு இருக்கிறது என்பதைச் சொல்கிறது என்றார்.
பின்னர் கடலூரில் பிரச்சாரத்தில் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். திமுக, பாமக போட்டியிடும் தொகுதிகளில் நான் பிரசாரம் செய்கிறேன். இது தான் எங்கள் அணி.
பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியில் இடம்பெறும் என்று, 10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் நினைத்துப் பார்த்தது இல்லை. இன்று நல்லிணக்கத்தோடு 2 கட்சிகளும் ஓரணியில் நிற்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கருணாநிதி. அவரை நாம் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் ஏராளமானோர் குடிசைகளில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் கான்கிரீட் வீடுகள் கிடைக்க வேண்டுமானால், மீண்டும் கருணாநிதி முதல்வராக ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்.
விதி மீறல்-திருமாவளவன் மீது வழக்கு:
இந் நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக திருமாவளவன், பண்ருட்டி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பண்ருட்டி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரனை ஆதரித்து நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் செய்துவிட்டு இரவு 10.20 மணிக்கு திருமாவளவன் பண்ருட்டி வந்தார். அங்கு அவர், சபா. ராஜேந்திரனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.
நேரம் தவறியும், பொதுமக்களுக்கு இடையூறாக பிரசாரம் செய்ததாகவும் தேர்தல் நன்னடத்தை குழுத் தலைவர் எஸ்.அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில், திருமாவளவன், சபா.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Leave a Reply