சென்னை : “”தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களும், தொண்டர்களும் மலைத்துப் போக வேண்டாம்; கலக்கம் அடைய வேண்டாம்.
என்ன தான் பணம் கொட்டினாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது. தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைவது உறுதி,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.
மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜலட்சுமியை ஆதரித்து, மயிலை மாங்கொல்லையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசியதாவது:ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் தான் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியின் சாதனையாக விளங்குகிறது. அன்று சுதந்திர போராட்டத்திற்காக வெள்ளையர்களை வெளியேற்ற போராட்டம் நடந்தது. இன்று கருணாநிதியின் குடும்பத்தை வெளியேற்ற மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்தப்படுகிறது.இந்த தேர்தலில் தி.மு.க., டிபாசிட் வாங்காத அளவிற்கு புதிய வரலாறு படைக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் பல சாதனைகளை செய்ததாக கூறுகின்றனர். என்ன சாதனை செய்தனர்? தனது மகன் மத்திய அமைச்சர்; இன்னொரு மகன் துணை முதல்வர்; பேரன் மத்திய அமைச்சர்; மகள் எம்.பி.யாக உள்ளார். இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டு சாதனை. ஊழலில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.
விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் புரிவதில் கருணாநிதி வல்லவர் என 35 ஆண்டுகளுக்கு முன்பே சர்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்றார். இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் இதுபோல ஒரு சான்றிதழ் பெற்றதில்லை.ஏழு கோடி மக்களும் வளர்ச்சி பெற, தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, கயவர்களின் கூட்டம் அழிந்திட ஜனநாயக நாட்டில் ஒரே வழி தேர்தல் தான். அதை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மின்வெட்டு இல்லாமல் இருந்தது. கல்வி கட்டணத்தை குறைப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அறிக்கையும் சமர்ப்பித்தது. இதனால் ஏழை மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் கட்டியது தான் மிச்சம். கல்வி கட்டணம் குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பு. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் முத்தரப்பு குழு அமைத்து, கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். ராமாயணத்தில் நடைபெற்ற சம்பவத்தை நினைவுகூருகிறேன். ராமருக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ராமன் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக ராமனின் உள்ளத்தை பலவீனமாக்கி, மன உறுதியை குலைக்க வேண்டும் என ராவணன் விரும்பினான்.
அதற்காக ராவணன், தந்திரமாக மாயை சீதையை உருவாக்கி, அவரை வாளால் குத்தினான். தனது கண்ணெதிரில் அன்பு மனைவி சீதை கீழே விழுந்ததைப் பார்த்த ராமன் மயக்கமடைந்தான். உடனே, விபீஷணன் ராமனிடம், “சீதை உயிரோடு தான் இருக்கிறார். உனது மனவலிமையை சோர்வடைய செய்வதற்கு ராவணன் நடத்திய நாடகம்’ என சொல்லி ராமனை தேற்றினார்.தற்போது வாக்காளர்களை மனமாற்றம் செய்யும் முயற்சியில், பணம் வாரி இறைக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக 234 தொகுதிகளிலும் பணமழை பெய்து கொண்டிருக்கிறது. பணம் வாங்கிக் கொண்டு தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பர் என்ற மாயத் தோற்றத்தை கருணாநிதி உருவாக்க நினைக்கிறார்.தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு வேட்பாளர்களும், அ.தி.மு.க., வினரும், கூட்டணிக் கட்சியினரும் மலைத்துப்போக வேண்டாம். கலக்கம் அடைய வேண்டாம். என்ன தான் பணம் கொட்டினாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது. தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைவது உறுதி.ஊழல் பணம் தேர்தல் முடிவை மாற்றாது. கட்சியினர், தொண்டர்கள் யாரும் சோர்வடைய வேண்டாம்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
Leave a Reply