டெல்லி: உற்பத்தி திறனை அதிகரிக்க தொழிலாளர்கள் கொடுத்த யோசனைகளை அமல்படுத்தியதால், கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் ரூ.160 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.
தொழிலாளர் பிரச்சினையால் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவ்வப்போது, கடும் உற்பத்தி இழப்பை சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால், பல கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆனால், நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி தொழிலாளர்களால் ஆண்டுதோறும் பல கோடியை மிச்சப்படுத்துகிறது.
உற்பத்தி செலவீனத்தை குறைப்பது குறித்து மாருதி நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில், மதிப்புமிக்க கருத்துக்களை தெரிவிக்கும், தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டுவதோடு மட்டும் நில்லாமல், அவர்களது யோசனைகளை உடனடியாக அமல்படுத்துகிறது.
தொழிலாளர்கள் கொடுக்கும் யோசனைகளை அமல்படுத்துவதன் மூலம், ஆண்டுக்கு பல கோடியை மிச்சப்படுத்தி காலரை தூக்கிவிட்டு கொள்கிறது மாருதி. கடந்த 2009-10 நிதியாண்டில் ரூ.200 கோடியை மிச்சப்படுத்திய மாருதி, கடந்த நிதியாண்டில் ரூ.160 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு மேலாண் இயக்குனர் சித்திக் கூறியதாவது:
“குறைந்த செலவில், உற்பத்தி திறனை பன்மடங்கு அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொழிலாளர்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகிறோம். இதனால், உற்பத்தி செலவீனம் கணிசமாக குறைவது உண்மைதான். கடந்த 2009-10 ம் நிதியாண்டில் ரூ.200 கோடி மிச்சப்படுத்தினோம்.
மேலும், அந்த நிதியாண்டில் 1.29 லட்சம் கருத்துக்களை தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. கடந்த நிதியாண்டில், 2.29 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டன. கருத்துக்களை பெறுவதோடு மட்டும் நில்லாமல், அதை உடனுக்குடன் அமல்படுத்துவதற்கும் முக்கியத்துவம் தருகிறோம,” என்றார்.
கடந்த நிதியாண்டில் எவ்வளவு தொகை மிச்சப்படுத்தப்பட்டது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், ரூ.160 கோடியை மாருதி மிச்சப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply