புதுடில்லி:புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய்களை அபராதமாக வசூலித்த தொலைத்தொடர்பு அமைச்சகம், தற்போது, பழைய நிறுவனங்களின் பக்கம், கவனத்தை திருப்பியுள்ளது.
குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் சேவையை துவக்காத அவர்களிடம் இருந்து, 150 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவைக்கான லைசென்ஸ் பெற்று, குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் சேவையைத் துவக்காத, 119 புதிய நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு, தொலைத்தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தது.அபராதத் தொகையாக, 300 கோடி ரூபாய் வசூலித்தது. இதேபோல் குறித்த காலத்திற்குள் சேவையைத் துவக்காத, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், ஆர்காம், ஏர்செல் உட்பட, பல பழைய நிறுவனங்களிடம் இருந்து, 477 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கவும், தொலைத்தொடர்பு அமைச்சகம் திட்டமிட்டது.ஆனால், இதற்கு அந்நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
“ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற தேதி முதல்தான், தொலைத்தொடர்பு சேவையை துவக்குவதற்கான காலக்கெடு ஆரம்பமாகிறது. தொலைத்தொடர்பு சேவைக்கான லைசென்ஸ் பெற்ற நாள் முதல் இல்லை. எனவே, அதிக அபராதம் விதித்தது சரியல்ல’ என, தெரிவித்தன.இதையடுத்து, 477 கோடி ரூபாய் என்பது, 135.60 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. அதற்கான வட்டியையும் சேர்த்து, மொத்தம் 150 கோடி ரூபாய் வசூலிக்க தொலைத்தொடர்புத் துறை தீர்மானித்துள்ளது. இருந்தாலும், இந்த அபராத விவகாரம் தொடர்பாக, எந்த ஒரு நிறுவனத்திற்கும் இதுவரை நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய எஸ்-பாண்ட் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில், போட்டி ஏல முறை எதுவும் பின்பற்றப்படவில்லை என, இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் வர்த்தக ரீதியான விஷயங்கள் எல்லாம் ரகசியமானவை என்பதால், தங்களது துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் தேவாஸ் மல்டி மீடியா இடையேயான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என்றும் கூறிவிட்டது.
Leave a Reply