நந்திகிராம் : “எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நந்திகிராமை என் முகவரியாக மாற்றிக் கொள்வேன்’ என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பேசினார்.
கடந்த 2007ல் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த வன்முறையை யாரும் மறந்து விட முடியாது. தொழிற்சாலை அமைப்பதற்காக, விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து, திரிணமுல் காங்., சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில், ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது, நந்திகிராமுக்கு மம்தா சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையை மறித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. தேர்தல் பிரசாரத்துக்காக, மம்தா நந்திகிராம் சென்றபோது, ஆயிரக்கணக் கான மக்கள் திரண்டு வந்து, அவரை வரவேற்றனர்.
அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பேசியதாவது: இது ஆசீர்வதிக்கப்பட்ட பூமி. இந்த பகுதி மக்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். என் பெயரை மறந்தாலும், மறப்பேன். ஆனால், நந்திகிராமை மறக்க மாட்டேன். திரிணமுல் காங்., ஆட்சி அமைத்தால், இந்த பகுதியில், கல்லூரி, பள்ளி, மிகப் பெரிய மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நந்திகிராமை என் முகவரியாக மாற்றிக் கொள்ளவும் தயங்க மாட்டேன். இவ்வாறு மம்தா பேசினார்.
தற்போது நடக்கும் சட்டசபை தேர்தலில், மம்தா போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் திரிணமுல் காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மம்தா முதல்வராகி விடுவார். ஆனால், ஆறு மாதங்களுக்குள், ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வேண்டும்.
எனவே, நந்திகிராமில் போட்டியிட்ட தனது கட்சி வேட்பாளரை, ராஜினாமா செய்யும்படி கூறி, அங்கு இடைத்தேர்தல் நடக்கும்போது, தானே போட்டியிட மம்தா திட்டமிட்டுள்ளார். இதைத் தான், தனது பேச்சின்போது, நந்திகிராமை, எனது முகவரியாக மாற்றிக் கொள்வேன் என, மறைமுகமாக குறிப்பிட்டார் என, அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply