மதுரை: “”வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், தி.மு.க., கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்,” என மதுரையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.
மதுரை சங்கம் ஓட்டலில் இருந்து நேற்று மதியம் 1.15 மணிக்கு ஆண்டிப்பட்டி பிரசாரத்திற்காக புறப்பட்ட போது, அவர் கூறியதாவது:
* தேர்தல் பிரசாரம் எப்படி உள்ளது?
வெற்றிகரமாக உள்ளது. மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால், அ.தி.மு.க., வெல்லும் என்பதில் சந்தேகமில்லை.
* வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதே?
இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பணம் கொடுத்தாலும் தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
தி.மு.க., வக்கீல் முருகன் தலைமையில் 16 பேர், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த 50 பேர் அ.தி.மு.க.,வில் சேர்ந்தனர். அப்போது ஜெயலலிதா, “”தேர்தலுக்காக பாடுபடுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பிரசாரம் முடிந்தவுடன் உங்களை சென்னைக்கு அழைத்து பேசுகிறேன்,” என்றார்.
சி.எஸ்.ஐ., திருமண்டில துணைத் தலைவர் பெர்னாண்டோ ஆபிரகாம் தலைமையில் பாதிரியார்கள் சந்தித்து, “”அமெரிக்கன் கல்லூரி விஷயத்தில் அரசு தலையிடுகிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இப்பிரச்னையில் தலையிட்டு, சுமுக தீர்வு காண வேண்டும்,” என்றனர். பின், ஜெயசிங் தலைமையில் வந்த இளம்பாதிரியார்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.
சோனியா கூட்டத்தில் வன்முறை: அ.தி.மு.க., மீது பழி சுமத்த சதி : மதுரையில் ஜெயலலிதா “திடுக்’ : “”சென்னையில் இன்று சோனியா பேசும் கூட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, அந்த பழியை அ.தி.மு.க., மீது சுமத்தி, தேர்தல் ஆதாயம் தேட தி.மு.க., முயற்சிக்கிறது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.
மதுரை அய்யர்பங்களாவில், நேற்று மாலை 5.20 முதல் 5.40 மணி வரை புறநகர் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ஜெயலலிதா பேசியதாவது : ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்க பொன்னான வாய்ப்பாக இத்தேர்தல் அமைந்துள்ளது. கருணாநிதி குடும்பத்தினரும், சில தி.மு.க., தலைவர்களின் குடும்பத்தினரும் உலக பணக்காரர் பட்டியலில் இடம்பெறும் அளவிற்கு தமிழகத்தை கொள்ளையடித்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.மதுரையில் தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். இதை தட்டிக்கேட்ட வட்ட செயலர் குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்திற்கு, தேர்தலுக்குப் பின் முடிவு கட்டப்படும்.சென்னையில் இன்று சோனியா பேசுகிறார். இந்த கூட்டத்தின் போது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, அந்த பழியை அ.தி.மு.க.,மீது சுமத்தி, தேர்தல் ஆதாயம் தேட தி.மு.க., முயற்சிக்கிறது. இதற்கு தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
வேனுக்கு பச்சை விரிப்பு :* ஜெ., பேசுவதற்காக அய்யர்பங்களாவில் இருந்த காலியிடத்தை மைதானமாக மாற்றியிருந்தனர்.
* தே.மு.தி.க.,வினர் மெகா கொடிகளுடன் வந்திருந்தனர். அவை வீடியோ கேமராவை மறைத்ததால், பின்னால் கொண்டு செல்லுமாறு அ.தி.மு.க.,வினர் அடிக்கடி “மைக்’கில் வேண்டினர்.
* அ.தி.மு.க., வேட்பாளர்கள் தமிழரசன் (மதுரை கிழக்கு), சாமி(மேலூர்), முத்துராமலிங்கம்( திருமங்கலம்), கருப்பையா (சோழவந்தான்), தே.மு.தி.க., வேட்பாளர் ஏ.கே.டி. ராஜா (திருப்பரங்குன்றம்) ஆகியோர் ஜெ., பேசி முடிக்கும் வரை கும்பிட்டபடி இருந்தனர்.
* ஜெயலலிதாவின் வேன் நின்றிருந்த இடத்தில் பச்சை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.
Leave a Reply