மதுரை:ஏ.டி.எம்., கார்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய, மையம் அமைக்கப்பட்டுள்ளது.
காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஸ்டேட் வங்கி இப்புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய, அதற்குரிய “சலானில்’ பெயர், வங்கிக் கணக்கு, தேதி, செலுத்த வேண்டிய தொகையை பூர்த்தி செய்ய வேண்டும். இது படிக்காதவர்களுக்கு சற்றே கடினமான விஷயம். படிவம் பூர்த்தி செய்த பின், வரிசையில் காத்திருக்க வேண்டும். மேலும் வங்கியாளர் ஒவ்வொரு வாடிக்கையாளரின் 16 இலக்க கணக்கு எண்ணை, கம்ப்யூட்டரில் பதிவு செய்ய சிறிது நேரமாகும். அப்போது கணக்கு எண் தவறாக பதிவாகவும் வாய்ப்புள்ளது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், “கிரீன் சானல் கவுண்டர்’ திறக்கப்பட்டுள்ளது. இங்கே பணத்தை டெபாசிட் செய்ய, காகித படிவத்தில் (செலானில்) பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தினால் போதும். மையத்தில் உள்ள வங்கியாளர், ஏ.டி.எம்., கார்டை இயந்திரத்தில் தேய்க்கும் போது, வங்கி கணக்கு எண், திரையில் தெரியும். இதில் பணத்தை எடுக்கலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம், எடுக்கலாம். அனைத்து தகவல்களும் நாமே எளிதாக கையாளும் வகையில் இருப்பதால், ஒருநபருக்கு அதிகபட்சமாக இரண்டு நிமிடங்களுக்குள் வேலை முடிந்து விடும். டெபாசிட் செய்வதாக இருந்தால், நாம் கொடுத்த தொகை திரையில் துல்லியமாக தெரியும். இதில் ஏமாற்றுவதற்கோ, தவறு நேரவோ வாய்ப்பில்லை.
நாம் கொடுத்த தொகையும், திரையில் பதிவு செய்த தொகையும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், நமது கணக்கில் வரவோ, செலவோ வைக்கப்படும்.இது குறித்து வங்கி முதன்மை மேலாளர் அழகுராஜன் கூறுகையில்,””பாரத ஸ்டேட் வங்கி சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. மதுரையில் தற்போது 16 கிளைகளில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மண்டலத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என்றார்.
Leave a Reply