சென்னை: பணக் கடத்தலை தடுக்க வாகன சோதனை செய்யும் பணியை மேற்கொண்டுவரும் தேர்தல் கமிஷனுக்கு, சென்னை ஐகோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
“தேர்தல் முடியும் வரை, பொதுமக்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வினியோகம் செய்வதை தேர்தல் கமிஷன் அனுமதிக்கக் கூடாது. தேர்தல் செலவை கண்காணிக்க பிறப்பிக்கப்பட்ட வழிமுறைகளை தேர்தல் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்’ என, கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அமைச்சர் கே.பி.பி.சாமி தாக்கல் செய்த மனுவில், “என் வீட்டில்தேர்தல்அதிகாரிகள் சோத னையிட்டனர். எதையும் பறிமுதல் செய்யவில்லை. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. என் வீடு, அலுவலகத்தில் சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும்’என, கோரியிருந்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தில்லை நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் கமிஷனின் உத்தரவு என்கிற பெயரில், பொதுமக்களிடம், வாகனங்களில் சோதனை நடத்தி துன்புறுத்துகின்றனர். வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பணத்தை தன்னிச்சையாக பறி முதல் செய்கின்றனர்’ என, கூறப்பட்டுள்ளது.ஐகோர்ட் வக்கீல் வெற்றிசெல்வன், மணிவண்ணன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம்அடங்கிய “முதல் பெஞ்ச்’ விசாரித்தது. தேர்தல் கமிஷன் சார்பில் சீனியர் வக்கீல் ஜி.ராஜகோபால், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகினர்.
“முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:மனுக்கள் தாக்கல் செய்தவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஆசிரியர், இந்த சோதனையால் பாதிக்கப்பட்டவர் அல்ல. பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களில் ஒருவர் கூட, தேர்தல் கமிஷன் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. தேர்தலில் ஏற்படும் செலவுகளை கண்காணிக்க விரிவான வழிமுறைகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. கணக்கில் வராத பணத்தை அணுகுவது குறித்தும் வழிமுறைகள்பிறப்பிக்கப்பட்டுள்ளன. முறையான ஆவணங்களுடன் பணம், பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால்,அதை சோதனையிட்டு பறிமுதல் செய்யும் அதிகாரிகளிடம் திருப்திகரமான விளக்கம் அளித்தால், உடனடியாக அவற்றை உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பணம் வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டிய கடமை உள்ளது.
தேர்தல் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பதால், நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் சட்டம் ஒழுங்கை தேர்தல் கமிஷன் பேண வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு உள்ள அதிகாரம் பற்றி பல்வேறு தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளுக்கு முன், அதிகாரிகள் திருப்தியடைய வேண்டும் என்றும், காரணங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறுவது, சோதனை, பறிமுதல் நடவடிக்கையின் நோக்கத்தை வீணாக்கி விடும். இது அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தடுப்பதற்கு சமம். எனவே, இந்த மனுக்களை பைசல் செய்கிறோம்.
Leave a Reply