வாஷிங்டன் : அமெரிக்காவின் புகழ்பெற்ற குவான்டனாமோ சிறைச் சாலையில், பயங்கரவாதிகளோடு, அப்பாவிகளும், பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட, பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள, 700 ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கியூபா நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள குவான்டனாமோ சிறைச் சாலையில், உலகின் முக்கிய குற்றவாளிகள் பலரை, அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது. அவர்கள் பற்றிய தகவல்களை, “விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட்டது. மேலும், “தி கார்டியன்’, “தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட சில பத்திரிகைகளும், 700 ரகசிய ஆவணங்களை வெளியிட்டன.
அப்பாவி கைதிகள்: அத்தகவல்களின்படி, தற்போது, அச்சிறையில், 172 பேர் வைக்கப்பட்டுள்ளனர். 2002-2009 காலகட்டத்தில் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த, 780 பேரில், 220 பேர் மிக மோசமான பயங்கரவாதிகள். 150 பேர், அப்பாவி ஆப்கன் மற்றும் பாகிஸ்தானியர்கள். இவர்கள் தவறான அடையாளம் அல்லது தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்ததற்காக பிடிபட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், இரட்டைக்கோபுரத் தகர்ப்பு குறித்த விசாரணையின் போது பிடிபட்டவர்கள், பல ஆண்டுகளாக குவான்டனாமோ சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கைதிகளிடம் உண்மையை வரவழைக்க என்னவிதமான விசாரணைகள் நடத்தப்பட்டன என்பது பற்றி, இந்த ஆவணங்கள் மவுனம் சாதிக்கின்றன.
அதேநேரம், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., ஈரானின் உளவுத் துறை, எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியையும் அமெரிக்க அதிகாரிகள் சேர்த்திருந்ததாக, “விக்கிலீக்ஸ்’ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply