சென்னை : “பள்ளி,கல்லூரி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்’ என, போக்குவரத்து அதிகாரிகள் வற்புறுத்துவதற்கு,சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நிர்வாக சங்கத்தின் பொதுச் செயலர் கிறிஸ்துதாஸ் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ஜெய்சந்திரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சுரேஷ்குமார் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை, “வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்’ என, அதிகாரிகள் வற்புறுத்துவதற்கு தடை விதித்தார்.
ஐகோர்ட்டில் கிறிஸ்துதாஸ் தாக்கல் செய்த மனு: பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வேன், பஸ்களை பயன்படுத்துகிறோம். எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பள்ளிகள், பெரும்பாலும் கிராமப்புறங்கள், நகர்புறங்களில் அமைந்துள்ளன. மோட்டார் வாகனச் சட்டப்படி, நாங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எல்லாம் நடுத்தரமானவை.
மோட்டார் வாகனச் சட்டப்படி, எங்கள் வாகனங்களை அதிகபட்சம் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் இயக்கலாம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சம் 50 கி.மீ., வேகம் எனவும் அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அரசு உத்தரவை ரத்து செய்வதற்குப் பதில், இந்த அரசாணைப்படி வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்தக் கூடாது என, உத்தரவிட்டது. ஐகோர்ட் இவ்வாறு உத்தரவிட்ட பின்னும், வேக கட்டுப்பாடு கருவியை பொருத்த வேண்டும் என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்யவில்லை என்றும், வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என, வற்புறுத்தக் கூடாது என்று மேல் அதிகாரிகளிடம் இருந்து தங்களுக்கு உத்தரவு வரவில்லை என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், வழக்கு தாக்கல் செய்தவருக்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறுகின்றனர்.
எனவே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிறப்பித்த அரசாணையின்படி, பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்துவதற்கு, எங்கள் சங்க உறுப்பினர்களைப் பொறுத்தவரை தடை விதிக்க வேண்டும். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply