ராய்ப்பூர்: மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி,
சத்திஸ்கர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்(61) நக்சலைட்கள் இயக்கத்தில் செயல்பட்டதாகக் கூறி, அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி, சத்திஸ்கர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து பினாயக் சென், சத்திஸ்கர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார். “மாவோயிஸ்டுகளின் கொள்கைகள் அடங்கிய புத்தகத்தை வைத்திருந்ததற்காக அவரை நக்சலைட் என, குற்றம் சுமத்த முடியாது. எனவே, பினாயக் மீது சுமத்தப்பட்ட குற்றம் அடிப்படையில்லாதது’ என கூறி, அவருக்கு ஜாமீன் வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. சென்னுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்துள்ள உத்தரவு, சத்திஸ்கரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நேற்று விசாரணை நடத்திய மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பி.பி.வர்மா, ஜாமீன் அளிக்க உத்தரவாத தொகை ஒரு லட்ச ரூபாயை செலுத்தும்படியும், ஐகோர்ட் விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் எனவும், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது எனக் கூறி, பினாயக் சென்னின் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
Leave a Reply