சென்னை: இதுவரை ஒருவருட படிப்பாக இருந்த பி.எட். பட்டப்படிப்பை, இனிமேல் 4 ஆண்டுகள் கொண்ட படிப்பாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.
நல்ல நிம்மதியான வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக, ஆசிரியப் பணிக்கு எந்த வகையிலும் தகுதியில்லாத ஏராளமான நபர்களால் விரும்பப்படுவது ஒரு வருட பி.எட். படிப்பு. ஆனால் இதை நீக்கிவிட்டு, இளநிலை படிப்போடு சேர்ந்த 4 வருட படிப்பாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இனி வழக்கறிஞர் படிப்பை போன்று பி.ஏ-பி.எட். அல்லது பி.எஸ்சி-பி.எட். என்று அழைக்கப்படும்.
கடந்த மாதம் மத்திய மனிதவள அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி. அமைப்பின் வழிகாட்டுதலின்படி, மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் இதற்கான செயல்திட்டம் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுடன்(என்.சி.டி.இ) கலந்தாலோசித்து வருகிறது.
மேலும் அந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட செயல்திட்டத்தை தற்போது விரிவான விவாதத்திற்காக கல்வியாளர் சமூகங்கள் மத்தியில் சுற்றறிக்கையாக யு.ஜி.சி. அனுப்பியுள்ளது.
இந்த செயல்திட்டம் குறித்து தமிழ்நாடு பி.எட். பல்கலை துணைவேந்தர் பத்மநாபன் கூறுகையில், “இந்த ஒருங்கிணைந்த பி.எட். படிப்பின் மூலம் ஆசிரியர் படிப்பின் தரத்தை உயர்த்த முடியும். இதன்மூலம் ஆரம்பத்திலிருந்தே ஆசிரியர் பணிக்கு செல்ல விருப்பம் உடையவர்கள் மட்டுமே, பள்ளி படிப்பை முடித்ததும், இந்த 4 வருட படிப்பை மேற்கொள்வார்கள். தற்போது விரும்பிய எந்த வேலையும் கிடைக்காதவர்களுக்கான ஒரு போக்கிடமாக ஒரு வருட பி.எட். படிப்பு ஆகிவிட்டது.
மேலும் தமிழ்நாடு பி.எட். பல்கலையானது(டி.என்.டி.இ.யு), இந்த கல்வியாண்டிலேயே(2011-12) இந்த புதிய ஒருங்கிணைந்த படிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக என்.சி.டி.இ. அமைப்புடன் ஏற்கனவே தொடர்புகொண்டு, அவர்களின் ஆலோசனை மற்றும் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
இதைத்தவிர அந்த மாநாட்டில், பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ. ஹானர்ஸ் அல்லது உயிரியல் மற்றும் கணிதத்தில் பி.ஏ. ஹானர்ஸ் என்ற வகையில், 4 வருட இரட்டை பட்டப் படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
Leave a Reply