பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் விண்ணில் பாய கவுண்ட்-டவுன் தொடங்கியது

posted in: மற்றவை | 0

சென்னை: பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் வரும் புதன்கிழமை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 54 மணி நேர கவுண்ட்-டவுன் இன்று காலை தொடங்கியது.

ஏப்ரல் 20ம் தேதி காலை 10.12 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட் மூலம் ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட், எக்ஸ்-சாட் ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

கவுண்ட்-டவுன் உடன் ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது.

ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) தயாரித்துள்ளது. 1,206 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக் கோள் தொலை உணர்வு திறனில் (remote sensing) அதி நவீன வசதிகளைக் கொண்டது. இதன் மூலம் நாட்டின் இயற்கை வளங்களை கண்காணிக்க முடியும்.

யூத்சாட் செயற்கைக்கோள் இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பு ஆகும். இதன் எடை 92 கிலோ. விண்மீன்கள் மற்றும் காற்றுமண்டல ஆய்வுக்கு இது பயன்படும்.

எக்ஸ்-சாட் செயற்கைக்கோள் 106 கிலோ எடை உள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இதைத் தயாரித்துள்ளது.

கடந்த டிசம்பர் 25ல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-6 ராக்கெட் தோல்வியடைந்து வானிலேயே சிதறடிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. அதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் அதில் பொருத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *