சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளில் சீட் கிடைக்காத நான்கு எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சையாக களமிறங்கி, புதுச்சேரி அரசியலில் கலக்கியுள்ளனர்.
புதுச்சேரி காங்., எம்.எல்.ஏ.,க்கள் புஸ்சி ஆனந்து, வி.கே.கணபதி ஆகியோருக்கு, இந்த தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இவர்களது தொகுதிகள் கூட்டணி கட்சியான தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பை இழந்தனர்.
அதிருப்தி அடைந்த இருவரும், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சுயேச்சையாக களமிறங்கினர். புஸ்சி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் அனிபால் கென்னடியை எதிர்த்து புஸ்சி ஆனந்துவும், காரைக்கால் தெற்கு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் நாஜிமை எதிர்த்து வி.கே.கணபதியும் களத்தில் குதித்தனர். தி.மு.க., வேட்பாளருக்கு மட்டுமல்லாமல், அ.தி.மு.க., – என்.ஆர். காங்., – தே.மு.தி.க., கூட்டணி வேட்பாளர்களுக்கும் இரு சுயேச்சைகளும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாரிமுத்து, காங்., ஆட்சிக்கு ஆதரவு அளித்தார். இதற்கு பரிசாக வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. காலப்போக்கில் காங்., அலுவலகத்துக்கு வருவது, கட்சி விழாக்களில பங்கேற்பது என்று, காங்கிரசில் மாரிமுத்து ஐக்கியமானார். இந்த தேர்தலில் காங்., கட்சியில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டார்.
ஆனால், காங்கிரஸ் அவருக்கு சீட் தராமல் கைவிரித்து விட்டது. சீட் கிடைக்காததால் விரக்தியடைந்த மாரிமுத்து, “காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிப்பேன்’ என்ற சபதத்துடன் மீண்டும் சுயேச்சையாக தேர்தல் களத்தில் குதித்தார். இதில், தி.மு.க., எம்.எல்.ஏ., வி.எம்.சி.சிவகுமாரின் கதை சற்று வித்தியாசமானது. கூட்டணியில் இவரது நிரவி தொகுதி, தி.மு.க.,விற்கு கிடைத்தும், கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலையால் சீனியரான வி.எம்.சி.சிவகுமாருக்கு சீட் மறுக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள், தி.மு.க., தலைவர்களின் படங்கள், கொடிக் கம்பங்களை அடித்து நொறுக்கினர். வி.எம்.சி.சிவகுமார், “என் வழி தனி வழி’ என்று கூறி, தி.மு.க., வேட்பாளர் கீதா ஆனந்தனை எதிர்த்து கோதாவில் குதித்தார். சுயேச்சைகளால் தங்களது வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமோ என, கட்சி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது, சுயேச்சைகளின் உண்மையான பலம் தெரியவரும்.
Leave a Reply