புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களின் “சோக கதை’

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தாலும், இது, புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு போதாத காலம் என்று தான் கூற வேண்டும்.

புதுச்சேரி சட்டசபையில், 30 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.,க்கள் சிக்கலை சந்தித்துள்ளனர். அதாவது, தொகுதி மறுசீரமைப்பு, தொகுதிப் பங்கீடு, கட்சியின் அதிரடி முடிவு போன்ற காரணங்களால் ஒன்பது எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் கிடைக்கவில்லை.

தொகுதி மறுசீரமைப்பில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், எஸ்.பி.சிவக்குமார், ராஜாராமன் ஆகியோரின் ராஜ்பவன், ஏம்பலம் தொகுதிகள் புதிய வடிவம் பெற்றுள்ளன. இத்தொகுதிகளை, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பிடிவாதமாக நின்று காங்., பெற்றுக் கொண்டதால், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவருக்கும் வாய்ப்பு நழுவியது.

ராஜ்பவன் தொகுதியில், 1991ம் ஆண்டில் இருந்து, தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற, எஸ்.பி.சிவக்குமாரால், தேர்தலில் போட்டியிட முடியவில்லை. கட்சி தலைமைக்கும், கூட்டணி தர்மத்துக்கும் கட்டுப்பட்டு, காங்., வேட்பாளருக்கு தேர்தல் பணியாற்றினார்.

தொகுதி மறுசீரமைப்பில், துணை சபாநாயகர் ஸ்ரீதரனின் பள்ளூர் தொகுதி முழுவதுமாக நீக்கப்பட்டது. இதனால், ஆறு முறை வெற்றி பெற்று, தொடர்ந்து, 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருக்கும் சீனியரான, ஸ்ரீதரனுக்கு கதவு மூடப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக, சுயேச்சை எம்.எல்.ஏ., நிட் நாராயணசாமி சீட் கேட்கவில்லை.

இதில், இந்திய கம்யூ., எம்.எல்.ஏ., விசுவநாதனின் சொந்த கதை சோக கதையாக உள்ளது. முதல்வர் வைத்திலிங்கம் போட்டியிடும் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட தேர்தல் பணிகளை விசுவநாதன் எப்போதோ துவக்கி விட்டார். கடைசி நேர திருப்பமாக, இந்திய கம்யூ., உயர்மட்டக் குழு விசுவநாதனுக்கு சீட் கொடுக்க மறுத்து விட்டது.

கட்சி தங்களுக்கு சீட் கொடுக்கும் என்ற ஆசை நிறைவேறாததால், “கடுப்பான’ நான்கு எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சையாக களமிறங்கி விட்டனர். இவர்கள் பிரிக்கும் ஓட்டுகளால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் தடுமாற்றத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *