மதுரை:சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் ஆதினமிளகி அய்யனார் முத்துமுனிய்யா கோயில் விழாவையொட்டி, இன்சூரன்ஸ் பாலிசியை ஏற்று ஜல்லிகட்டு நடத்த கோரும் மனுவை ஏப்., 26க்குள் பரிசீலிக்க, கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தமிழர் வீர விளையாட்டு ஜல்லிகட்டு பாதுகாப்பு குழு நலச்சங்க நிறுவனர் அம்பலத்தரசு தாக்கல் செய்த பொது நல மனு:ஆதினமிளகி அய்யனார் முத்துமுனிய்யா கோயில் விழாவையொட்டி ஏப்., 28ல் ஜல்லிகட்டு நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜல்லிகட்டு நடத்த ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு தொகை செலுத்த அரசு உத்தரவிட்டது.
ஜல்லிகட்டில் பாதிக்கப்படுவோருக்கு ஈட்டுத்தொகை வழங்க காப்பீட்டு கழகத்தில் ரூ.25 லட்சத்திற்கு, இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து, பிரீமியம் செலுத்த தயாராக இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதை ஏற்க மறுத்து, ஜல்லி கட்டு நடத்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காப்பீட்டு தொகைக்கு பதிலாக, இன்சூரன்ஸ் பாலிசியை ஏற்று, ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்க கோரி தலைமை செயலாளர், கலெக்டர், சப் கலெக்டருக்கு மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.காமேஸ்வரன் ஆஜரானார். நீதிபதிகள் கே.சுகுணா, ஏ.ஆறுமுகச்சாமி பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: இன்சூரன்ஸ் பாலிசியை ஏற்று, ஜல்லி கட்டு நடத்த அனுமதிப்பது குறித்த மனுதாரர் மனுவை கலெக்டர், ஏப்., 26க்குள் பரிசீலித்து, அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply