மயங்கி விழுந்த பெண்கள்… கண்டுகொள்ளாமல் எழுதி வந்ததைப் படித்த ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்துக்காக பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட பெண்கள் பலர், கொளுத்தும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.

ஆனாலும், அதைக் கண்டு கொள்ளாத ஜெயலலிதா, எழுதி வந்ததைப் படித்து முடிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அவரது இந்த செயல் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியைத் தந்தது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ளது கோடியூர். இங்கு ஜெயலலிதா இன்று பகல் 11 மணிக்கு பிரச்சாரத்துக்கு வருவார் என்று கூறியிருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் கடுமையான வெயில். தமிழ்நாட்டிலேயே கோடையில் அதிக வெயில் கொளுத்துவது வேலூர் மாவட்டத்தில்தான்.

எனவே மக்கள் வராமல் போனால் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்க வேண்டி வரும் என்று கருதிய அதிமுக நிர்வாகிகள், பணம் கொடுத்து ஏராளமானோரை அழைத்து வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இந்த மாவட்டத்தில் விவசாயம் முற்றாகப் பொய்த்துவிட்டதால், இந்த மாதிரி கட்சி கூட்டங்களுக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் கிராமத்துப் பெண்களும்.

தி்ருப்பத்தூர் – கிருஷ்ணகிரி சாலையின் இருபுறத்திலும் கூட்டம் கூட ஆரம்பித்தது. ஆனால் ஜெயலலிதா மட்டும் வரவேயில்லை. நேரமாக ஆக வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. மாலை 4 மணிக்கு ஆடி அசைந்து வந்தது ஜெயலலிதாவின் பிரச்சார வேன். இந்த வேனில் நின்றபடி (தலைக்கு மேல் குட்டி கூரை போடப்பட்ட வேன்… அம்மாவுக்கு வெயில் ஆகாது!) எழுதி வைத்திருந்ததைப் படித்துக் கொண்டே வந்தார்.

ஆனால் பணம் வாங்கிக் கொண்டு ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு ஆள்பலம் காட்ட வந்த பெண்கள் வெயில் தாங்க முடியாமல் மயங்கி சுருண்டு விழ ஆரம்பித்தனர். நெரிசல் தாங்காமல் பல பெண்கள் மயங்கி விழுந்து கூக்குரலிட்டனர். பலரது சேலைகள் கிழிந்தன. ஜெயலலிதாவின் பிரச்சார வேனுக்கு அருகிலேயே இவ்வளவும் நடந்தாலும், எழுதி வைத்ததைப் படிப்பதிலிருந்து கண்களை கடைசிவரை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திருப்பவே இல்லை.

ஒருவழியாக படித்து முடித்தவர், வாக்காளர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், பிரச்சார வேனில் விருட்டென்று போய்விட்டார் அவர். பணம் கொடுத்த கட்சிக்காரர்களும் காணாமல் போக, கூடியிருந்த மக்களே மயங்கிக் கிடந்த பெண்களுக்கு தண்ணீர் கொடுத்து தெளியவைத்தனர்.

பிரச்சாரத்துக்கு வந்த பலரும் ஜெயலலிதாவின் இந்த இரக்கமற்ற செயலை நேரில் பார்த்து அதிர்ந்தனர். ஜெயலலிதாவை கண்டபடி அர்ச்சனை செய்தபடி வீடு திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *