தமிழகத்தில், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், நடந்த முதல் சட்டசபை கூட்டத் தொடரே, சட்டசபை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.
2006 மே 26ம் தேதி, சட்டசபையில் சாதாரண விஷயத்துக்காக, அ.தி.மு.க.,வினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இந்த சமயத்தில் அ.தி.மு.க.,வினர், முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்களை அடிக்கப் பாய்ந்தனர். குறிப்பாக, தற்போது, தி.மு.க.,வில் சேர்ந்துள்ள சேகர்பாபு, அப்போது முதல்வர் கருணாநிதியை தாக்க பாய்ந்தார். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. அவைக் காவலர்கள் அ.தி.மு.க., வினரை வெளியேற்றினர். (சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறி, சபைக் காவலர்கள் அனைவரும் அடுத்தக் கூட்டத் தொடரிலேயே மாற்றப்பட்டு, புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
இதன்பின், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரச்னை ஏற்பட்ட சமயத்தில், ஜெயலலிதா சபையில் இல்லை. இதனால், அவரை சஸ்பெண்ட் செய்யவில்லை. தன் கட்சிக்காரர்களை தி.மு.க.,வினர் தாக்கியதாக, ஜெயலலிதா அளித்த பேட்டி, சபையில் உரிமை மீறல் பிரச்னையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்பின், ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறித்து, தானே எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. அதோடு மட்டுமின்றி, சட்டசபைக்கு தனி ஆளாக வந்து, ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால், ஜெயலலிதாவின் துணிச்சல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சட்டசபையில் ஏற்பட்ட இந்த களேபரம் காரணமாக, சபையின் அமைப்பையே மாற்றியமைக்க முடிவு செய்தார் முதல்வர் கருணாநிதி. இதையடுத்து, சட்டசபையில் ஆளுங் கட்சிக்கும், எதிர்க்கட்சி வரிசைக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கப்பட்டது. இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. பிரச்னை ஏற்பட்டால், இரு தரப்பினரும் மோதிக் கொள்ள முடியாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அ.தி.மு.க.,வில் பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் என கருதப்பட்டவர்களுக்கு, பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
Leave a Reply