திருச்சி : மின்சாரத்தை நிறுத்திவிட்டு இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாகக் கூறப்படுவதால், இரவு நேரங்களில், “கரன்ட்-கட்’டானால், திருச்சியில் உள்ள தொகுதி வாக்காளர்கள் குஷியாகி விடுகின்றனர்.
தமிழகத்தில் வரும் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரசார களத்தில் பரபரப்பாக உள்ளனர். வேட்பாளர்கள், கட்சியினர் ஒருபுறம் ஓட்டு வேட்டையாடி வர, தேர்தல் கமிஷன் கண்கொத்தி பாம்பாக அவர்களை கண்காணித்து வருகிறது.கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில், தேர்தல் கமிஷனின் கெடுபிடி இறுகியுள்ளது. தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கையால் அரசியல்வாதிகள் ஆட்டம் கண்டுள்ளனர். இந்த முறை சட்டசபை தேர்தலில், கதாநாயகனாக தேர்தல் கமிஷன் விளங்குகிறது. ஆனால், அத்தனை கெடுபிடிகளையும் மீறி, அரசியல் கட்சியினர், பணிகளை ஜரூராக செய்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஆம்புலன்ஸ், போலீஸ் வேன், அமரர் ஊர்தி, பஸ், லாரி மூலம் பணம் கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள் வீடுகளில், “ரெய்டு’ என நாள்தோறும் பரபரப்பு தான். ஆனால், திருச்சி மேற்குத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி இரவு நேரங்களில் 15, 20 நிமிடங்கள் திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுகிறது.வழக்கமாக 2 மணி நேரம் இருந்த மின்வெட்டு, தற்போது 3 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரவு நேரங்களில் 30 நிமிடம் வரை, “அடிக்கடி’ மின்வெட்டு ஏற்படுவதால் முதலில் எரிச்சலடைந்த திருச்சி மேற்குத் தொகுதி மக்கள், அதன்பிறகு குதூகலம் அடைந்துள்ளனர்.
தேர்தல் கமிஷனுக்கு தெரியாமல், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அரசியல் கட்சியினர் இரவு நேரங்களில், “மினி’ மின்வெட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த, “மினி’ மின்வெட்டை ஏற்படுத்தும், “லைன்-மேன்’கள், “சிறப்பாக கவனிக்கப்’படுகின்றனர். திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில், இந்த மின்வெட்டு அடிக்கடி அரங்கேற்றப்படுகிறது.அதேபோல், நேற்று முன்தினம் இரவு, திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட, “சர்க்யூட் ஹவுஸ்’ காலனியில், இரவு 12 மணிக்கு மேல் திடீரென, 20 நிமிடம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அந்த இருட்டை பயன்படுத்தி, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்குற்றச்சாட்டைக் கேட்ட, “சம்பந்தப்பட்ட’ கட்சியினர், “ஏற்கனவே, இதே விஷயத்திற்காக கெட்ட பெயர் சம்பாதித்திருக்கிறோம். அதை வைத்தே எங்களை வைத்து, “காமெடி’ பண்ணுவதா’ என, நொந்துபோய் கேட்கின்றனர்.
Leave a Reply