மீண்டும் மீண்டும் அழைக்கும் திமுக கூட்டணி-ஆதரிப்பாரா வைகோ?

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வைகோ தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விட ஆரம்பித்துள்ளனர் ராமதாஸ், திருமாவளவன், வீரமணி உள்ளிட்டோர்.

அதிமுக கூட்டணியிலிருந்து வைகோ வெளியில் வந்ததும் முதல்வர் கருணாநிதியும் மறைமுகமாக, ‘இந்திரஜித்தனே வருக’ என்று அழைத்துவிட்டார். ஆனால் மதிமுக தனது தேர்தல் புறக்கணிப்பு முடிவை அறிவித்துவிட்டு அமைதியாக உள்ளது.

அதேநேரம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மதிமுக விலகி உள்ள போதிலும் மதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி வைகோ எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், அக் கட்சியின் நிர்வாகிகள் திமுகவுக்கு வாக்களுக்குமாறு தொண்டர்களுக்கு மறைமுக செய்திகளை தந்து வருகின்றனர்.

இதையடுத்து பல்வேறு தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். சில மாவட்டங்களில், திமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று பகிரங்கமாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர் மதிமுகவினர்.

குறிப்பாக மதிமுக பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் திமுக- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்காக மதிமுகவினர் ஓசையின்றி பணியாற்றி வருகின்றனர்.

இந் நிலையில் மதிமுக ஆதரவு வாக்காளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான அறிவிப்பை அடுத்த வாரம் வைகோ வெளியிடுவார் என்று தெரிய வந்துள்ளது.

உங்கள் விருப்பம் போல் வாக்களிக்கலாம் என்று மதிமுக சார்பில் அறிவிக்கப்படும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் திமுக கூட்டணியை ஆதரிக்கலாம் என்று அவர் அறிவிப்பார் என்று வைகோவுக்கு நெருக்கமான சிலர் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *