மெட்ரிக் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட வேறு கல்வித் திட்டத்திற்கு மாற்ற எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது, என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வரும் கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் முழுமையான அளவில் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்திற்கு, தனியார் பள்ளிகள் மத்தியில் ஒரு பக்கம் வரவேற்பும், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வருகிறது. எதிர்ப்பவர்கள், “சமச்சீர் கல்விக் கொள்கையை வரவேற்கிறோம்; பாடத்திட்டம் தரமானதாக இல்லை. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு நிகரான தரத்தை எதிர்பார்க்கிறோம். அது, சமச்சீர் கல்வித் திட்டத்தில் இல்லாதது தான் பிரச்னை” என்று கூறுகின்றனர்.
இப்படி கூறும் தனியார் பள்ளி நிர்வாகிகளில், பலர் சி.பி.எஸ்.இ., திட்டத்திற்கு மாறிவிடலாமா என்பது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். குறிப்பாக, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகள், இந்த ஆலோசனையில் மூழ்கியுள்ளனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவக்க, பள்ளி கல்வித் துறையின் தடையில்லா சான்றிதழ் வாங்கவும், பலர் முயற்சித்து வருகின்றனர். இதனால், மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “மெட்ரிக் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட வேறு கல்வித் திட்டங்களுக்கு மாற்ற எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது” என்று, மெட்ரிக் கல்வி இயக்குனர் தேவராஜன், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகளை, திடீரென மூடிவிட்டு சி.பி.எஸ்.இ., திட்டத்திற்கு மாறப் போகிறோம் என்றால், அதை துறை அனுமதிக்காது. வேண்டுமானால், மெட்ரிக் பள்ளி அல்லாமல், வேறு இடவசதி இருந்தால், அவர்கள் தாராளமாக சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவக்கலாம். ஆனால், இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகளை, அப்படியே சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாற்ற முடியாது. அதை, அனுமதிக்கவும் மாட்டோம்.
பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கும்போது, உரிய சான்றிதழ்களை இணைக்க வேண்டும். அப்படி இணைக்காத 216 பள்ளிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அங்கீகாரத்தை புதுப்பிக்காமல், 500 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள், முறையாக அங்கீகாரத்தை புதுப்பித்தால் தான், கல்விக் கட்டணம் நிர்ணயிக்க முடியும் என, கல்வி கட்டணக் குழு தெரிவித்துள்ளது. எனவே, இந்த பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பி, உடனடியாக அங்கீகாரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு, வலியுறுத்தி வருகிறோம். இதற்காக, மாவட்டந்தோறும் முகாம் நடத்தி, அங்கேயே பள்ளி நிர்வாகிகளை வரவழைக்கிறோம். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அங்கேயே உடனடியாக உத்தரவு வழங்கப்படுகிறது.
வரும் 5ம் தேதி, சேலத்தில் முகாம் நடக்கிறது. அதில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு, அங்கீகார புதுப்பித்தல் உத்தரவுகளை பெறலாம். வரும் கல்வியாண்டில் இருந்து செயல்படுவதற்காக, புதிதாக 110 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளை சேர்த்து, மொத்த மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்ந்துள்ளது. இதில், மெட்ரிக் பள்ளிகள் 1,991; மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 1,767. இவ்வாறு தேவராஜன் கூறினார்.
தனியார் பள்ளிகள் விவரங்கள் வெப்சைட்டில் வெளியிட முடிவு: தமிழகம் முழுவதும், அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் 3,758 பள்ளிகளின் விவரங்களை, வெப்சைட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக பள்ளிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் வெளியிடப்படும் என்று இயக்குனர் கூறினார். இதன் மூலம், கல்வியாண்டு துவக்கத்தின்போது, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை அடையாளம் கண்டு, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும்.
Leave a Reply