மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: தங்கம் தென்னரசு

posted in: கல்வி | 0

சென்னை: மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார்.

தேர்வு முடிவுகளை இணையத் தளங்களிலும் எஸ்எம்எஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மே 14ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்திருந்தார். மே 13ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், அடுத்த நாளே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவது குழப்பமான நிலையை உருவாக்கும் என பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா தன்னுடனோ அரசிடமோ ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையான முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.

வழக்கமாக கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் திமுக அரசு காபந்து அரசு தான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சபீதா தானாகவே தேதியை அறிவித்தார். அவர் மீது ஜெயலலிதா ஆதரவாளர் என்ற புகாரும் கூறப்பட்டு வருகிறது.

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுவதாக ஏற்கனவே பேச்சு உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வரும் பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி சபீதா உள்ளிட்ட சில அதிகாரிகள் சிலர் தன்னிச்சையாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மே 9ம் தேதியே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைபச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *