மும்பை: டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸின் வெற்றிகரமான தலைவராக உள்ளார் ரத்தன் டாடா.
71 பில்லியன் டாலர் வர்த்தக சாம்ராஜ்யமாக இன்று டாடா வளர்ந்திருப்பதற்கு ரத்தன் டாடாதான் முக்கிய காரணம். இன்னும் இரு ஆண்டுகளில் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். தனது 75 வயதில் ஓய்வு பெற விரும்புவதாக அவர் அறிவித்திருந்தார். எனவே தனது இடத்துக்கு பொருத்தமான நபரைக் கண்டுபிடிக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார் டாடா.
5 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு நபர்களிடம் நேர்காணல் நடத்திப் பார்த்தது. ஆனால் அவர்களால் டாடாவுக்கு மாற்றாக யாரையும் தேர்வு செய்ய முடியவில்லை.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள குழுவின் உறுப்பினரும் டாடா சன்ஸின் இயக்குநருமான ஆர் கே கிருஷ்ணகுமார், “டாடாவின் இடத்தில் வேறொருவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவருக்கு நிகரான ஒரு தலைவரை எங்களால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை.
ரத்தன் டாடா பிறவியிலேயே ஒரு தலைவருக்குரிய அத்தனை அம்சங்களுடனும் பிறந்தவர். சிறந்த ஆராய்ச்சியாளர். இதனை அவர் எந்த விஷயத்தைச் செய்யும் போதும் கவனித்தால் புரியும். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் அவரது பங்களிப்பு மகத்தானது. நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தமான நபர்களை தேர்வு செய்ய முயன்று வருகிறோம். ஆனால் மிக சவாலான காரியம் இது. எந்த அளவு வெற்றி கிட்டும் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியும் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியுள்ளது,” என்று கூறியுள்ளார்.
உலகின் குறைந்த விலைக் காரான டாடா நானோவை உருவாக்கி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய பெருமை ரத்தன் டாடாவுக்கே உண்டு. டச்சு ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கி டாடா ஸ்டீலுடன் இணைத்த பெருமையும் டாடாவுக்கே. அதேபோல இவரது காலத்தில்தான் பிரிட்டனின் பெருமைக்குரிய ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியது.
ஆனால் டாடாவின் இத்தனை பெருமையும் ஒரு விஷயத்தில் சற்றே அடிவாங்கிவிட்டது என்பதும் உண்மையே. அது நீரா ராடியாவால் வந்த வம்பு. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் விஷயத்தில் பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் அவர் சமீபத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.
Leave a Reply