கோல்கட்டா : “ரயில் பயணிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு வழங்க முடியாத ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் எப்படி ஒரு மாநிலத்தை நிர்வகிக்க முடியும்?’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா கராத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய வாலிபால் வீராங்கனை சோனு என்ற அருனிமா சின்கா நேற்று முன்தினம் மத்திய தொழில் பாதுகாப்பு தேர்வு எழுத, ரயிலில், லக்னோவிலிருந்து டில்லி சென்று கொண்டிருந்தார்.
ரயில், பரேலி சென்ற போது, மூன்று பேர், இவரிடம் கொள்ளையில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களுடன் நடந்த சண்டையில், கொள்ளையர்கள், சோனுவை ரயிலில் இருந்து கீழே தள்ளினர். அப்போது, எதிரே வந்த மற்றொரு ரயிலில், சோனுவின் கால் சிக்கியது. தற்போது, ஒரு காலை இழந்த நிலையில், சோனு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, மேற்கு வங்கம், ஜல்பைகுரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பேசிய பிருந்தா கராத் கூறியதாவது: நாட்டின் முக்கிய அமைச்சரவையான ரயில்வே துறையை, மிகப்பெரிய பொறுப்பை அரசியல்வாதியிடம் (அமைச்சர் மம்தா பானர்ஜியை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) கொடுத்தால், பயணிகளுக்கான பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாது. மம்தாவின் நிலை இது தான். ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத இவரால், எப்படி ஒரு மாநிலத்தை நிர்வகிக்க முடியும்?
இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இப்பிரச்னையை நாங்களும் பார்லிமென்டில் எழுப்பி கொண்டு தான் இருக்கிறோம். ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர், மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ரயில்வே பாதுகாப்பு படையில் 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு பிருந்தா கராத் பேசினார்.
Leave a Reply