மதுரை :இலங்கையில் அப்பாவி தமிழர்களை போரில்
கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷே மீது, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது.
நெல்லையைச் சேர்ந்த பிரியன், வக்கீல்கள் செந்தில்குமார், அமர்தீப் மூலம் நேற்று தாக்கல் செய்த பொது நல வழக்கு:
இலங்கை அரசு, அப்பாவி தமிழர்கள் மீது போர்க்குற்றத்தில் ஈடுபட்டது. அங்குள்ளவர்கள் இந்தியா வம்சாவளியினர். சீக்கியர்கள், முஸ்லிம்கள் எந்த நாட்டில் தாக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியர்கள் எனக் கருதி, இந்திய அரசு தட்டிக் கேட்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள், கொலை செய்யப்படுவதை தட்டிக் கேட்க மறுக்கிறது.இலங்கை போரில் தமிழர்களை ராஜபக்ஷே அரசு கொன்று குவித்ததை, அரசியல் கட்சிகள் தட்டிக் கேட்டன. தற்போது, இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக, இங்கிலாந்து, ஐ.நா., சபை அறிக்கை சமர்ப்பித்தன. இலங்கையில், போர் அத்துமீறல்களை, வீடியோவாகவும் வெளியிட்டுள்ளன. ராஜபக்ஷேயின் தூண்டுதல் பேரில், தமிழர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. சோமாலியா, எகிப்தில் வெடித்த புரட்சியை ஆதரிக்கும் இந்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷே மீது, சர்வதேச கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Leave a Reply