ராணுவ பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை: தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு உள்ளிட்ட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,

வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தேர்தல் அலுவலர்களால் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும்பொருட்டு, தமிழகத்தின் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய அடையாள அட்டை இன்றி அத்துமீறி நுழைபவர்களைத் தடுக்க துணை ராணுவம் நிறுத்தப்பட வேண்டும் .

தேர்தல் கண்காணிப்பாளரின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும். தேர்தல் அதிகாரியால் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை அவர் அங்கு இருக்க வேண்டும் .

மேலும் வாக்குப் பதிவு எந்திரங்களின் சீல் அகற்றப்படுவதில் இருந்து, வாக்குகள் எண்ணப்படும் வரை அனைத்து நடைமுறைகளும் தேர்தல் ஆணையத்தால் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவும் அனைத்து வேட்பாளர்களின் முன்னிலையில் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *