ராமனா – ராவணனா ? ஜொலிக்கும் இந்தியா : ஜோதிடர்கள்- பிரபலங்கள் அபார நம்பிக்கை

புதுடில்லி: மும்பையில் இன்று நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபார நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டி இன்று மதியம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் , இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே , பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, நிதின்கட்காரி, காங்., தலைவர் சோனியா , பல்வேறு மாநில முதல்வர்கள் , மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய வி.ஐ.பி.,க்கள் பங்கேற்று போட்டியை ரசிக்கின்றனர். பிரதமர் மன்மோகன்சிங் அசாம் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவிருப்பதால் இவர் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் தாம் இந்த போட்டியை அவ்வப்போது கவனித்து வருவேன் என்றும், வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியில் இந்தியா 1983 ம் ஆண்டில் கோப்பையை பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக கோப்பை நமக்கு கிட்டும் என்ற எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த போட்டி நடக்கிறது.

கேப்டன் தோனிக்கு கன்னி ராசி: அஜய் பாம்பி என்ற ஜோதிடர் தோனியின் ஜாதகத்தை கணித்துள்ளார் அதன்படி 30 வயதாகும் தோனிக்கு கன்னிராசியாகும். இந்தராசியில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் கேது கிரகங்கள் நன்மைதருவதாக உள்ளதாகவும், இதுபோன்ற கிரக அமைப்பு கடந்த 29-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதும் போது இருந்ததால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. அதேபோன்ற கிரக அமைப்பு இன்றும் உள்ளதால் இந்தியா கோப்பையை எளிதாக பெறும் என அவர் தெரிவித்தார். இவரைப்போல் மற்ற பெரும்பாலான ஜோதிடர்களும் இந்தியா வெல்லும் என்றே கணித்துள்ளனர்.

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல உறுமுகிறார் சங்ககரா: இறுதி போட்டி குறித்து மும்பையில் பேட்டியளித்த இலங்கை கேப்டன் சங்ககாரா, இறுதி போட்டியில் இந்தியா எவ்வளவு வலுவான நிலையில் இருக்கிறதோ, இலங்கையும் அதே அளவு வலுவாக இருக்கிறது. நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை . எங்கள் அணி உலக கோப்பை தொடர் முழுவதும் நிதானமாக விளையாடி, நல்ல நிலையில் இருக்கிறது. எனவே எங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

பைனலுக்கு வந்த பாதை

இந்தியா லீக் சுற்று:

1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.

2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி “டை’ ஆனது.

3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.

5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காலிறுதி:

7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அரையிறுதி:

8. பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கை லீக் சுற்று:

1. 210 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி

2. பாகிஸ்தானிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

3. கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது

5. 139 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

6. 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது

காலிறுதி:

7. இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அரையிறுதி:

8. நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூன்றாவது முறையாக பைனலில் விளையாட உள்ள இந்தியா, இலங்கை அணிகள், தலா ஒரு முறை உலக கோப்பை வென்றுள்ளன. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, இரண்டாவது முறையாக உலக கோப்பை வென்று சாதிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *