புதுடில்லி: “நாட்டில் ஊழல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. லஞ்சத்தை எந்த நிலையிலும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஊழலை ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது. லோக்பால் மசோதா தாக்கலானதும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தினம், டில்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் மூத்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு, அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அதிகரித்து வரும் ஊழல்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. லஞ்சத்தை எந்த நிலையிலும் பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஊழலை முடிவுக்கு கொண்டுவர, உடனடி நடவடிக்கையைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஊழலை ஒழிப்பதற்கு தற்போதுள்ள சட்டங்களும், நடைமுறைகளும், நிர்வாக அமைப்புகளும், எந்த வகையிலும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஊழலை அறவே ஒழிக்க வேண்டும். இதற்கு விரைவான, கடுமையான நடவடிக்கை தேவை என்பதே மக்கள் விருப்பம்.
இதை கருத்தில் கொண்டு ஊழலை ஒழிக்க, அரசு உறுதியாக உள்ளது. வரும் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை அரசிடம் உள்ளது. இதற்காக அமைக்கப்ப்டடுள்ள அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகளும், மசோதாவுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின், அரசின் அதிரடி நடவடிக்கைகள் தொடரும். ஊழலை ஒழிப்பதில் பலநோக்கு அணுகுமுறை தேவை. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை வலுப்படுத்தியும், நிர்வாக நடைமுறைகளை சீர்படுத்தி, விரைவான நடவடிக்கைக்கு வழிகாண வேண்டும். இதற்கு அமைச்சர்கள் சார்பில் இடம் பெறும் குழுவினர் சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வர். இதற்கு சமூக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி, ஒரு சுமுகமான, அனைவருக்கும் ஏற்புடைய அம்சங்கள் அடங்கிய வரைவு மசோதாவை தயாரிப்பர். நீதித்துறையில் பணியாற்றுபவர்களுக்குள்ள பொறுப்புகள் தொடர்பான மசோதா ஒன்றும், ஊழலுக்கு எதிராக புகார் தெரிவிப்பவர்களை பாதுகாக்க மசோதா ஒன்றும் ஏற்கனவே பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக ஐ.நா., மாநாட்டு தீர்மானத்திற்கு அரசு ஒப்புதல் அளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு துவக்க உள்ளது. அரசாங்கத்தின் முக்கிய ஆணிவேராக இருப்பவர்கள், இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தான். இந்த பணிக்கு வரக்கூடிய அதிகாரிகள், புதிய சவால்களை சந்திக்கும் வகையில் சிறப்பான முறையில் செயலாற்ற வேண்டும். பணிக்காலத்தை வைத்து அவர்கள் சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தகுதி, திறமை, தரம் ஆகியவைதான் அவர்களுக்கான அளவுகோலாக இருக்க வேண்டும்.
நேர்மை: நேர்மையான, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயலாற்றும் அதிகாரிகளைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த நோக்கில் தான், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பார்க்கின்றனர். எனவே பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் உயர்ந்த தரத்துடன் பணியாற்றி நேர்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் வழிகாட்டியாக திகழ வேண்டும். நான் உங்களிடம் எதிர்பார்ப்பது, நேர்மை, அச்சமின்றி பணியாற்றுவதைத்தான். உங்கள் உயர் அதிகாரிகளிடமும், அரசியல் தலைவர்களிடம் ஆலோசனைகளை வழங்கும் போது, நேர்மையாகவும், பயமின்றியும் கருத்துக்களை தெரிவியுங்கள். நீங்கள் உயர் பதவியில் பணியாற்றும்போது, உங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும், அதே பாணியில் பணியாற்ற ஊக்குவியுங்கள். மக்களின் நன்மதிப்பை பெற்றால் எந்த சவாலையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம். ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மக்கள் அணி திரண்டதே சாட்சி. நக்சலைட்களால் மாவட்ட கலெக்டர் கடத்தப்பட்டபோது, மால்காங்கிரி மக்கள், அவரை விடுவிக்கக் கோரி அணி திரண்டனர். மக்களின் ஆதரவை பெறுவதுதான் இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு கிடைத்த நற்சான்று. ஊழலை ஒழிக்கும் பணியில் நீங்கள் ஒவ்வொருவரும் துடிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
Leave a Reply