வரும் 16ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்;கவுன்சிலிங் தேதி முழு விவரம்

posted in: கல்வி | 0

சென்னை : வரும் மே மாதம் 16ம் தேதி முதல், தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி துறை இயக்குனர் ஷீலா நிருபர்களிடம் கூறியதாவது:
இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பு 15ம் தேதி வெளியிடப்படும். 16ம் தேதி முதல் விண்ணப்பப் படிவங்களின் விற்பனை துவங்குகிறது. விண்ணப்பங்கள் அலுவலகத்தை சென்றடைவதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 2ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் ஜூன் 21ம் தேதி வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், ஸ்போர்ட்ஸ் கோட்டா பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் மாதம் 30ம் தேதியும், மற்ற பிரிவினர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரையும் கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த கோட்டாவில் யாருக்கு எவ்வளவு சீட் : தமிழகத்தில் மொத்தம் 17 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள 1, 945 சீட்களில் ஆல்இந்தியா அளவிலான ஒதுக்கீட்டில் 292 இடமும், மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் ஆயிரத்து 653 சீட்களும் பகிர்ந்து கொள்ளப்படும். தனியார் சுய நிதி மருத்துவக்கல்லூரியில் மொத்தம் ஆயிரத்து 10 சீட்களில், மானேஜ்மென்ட் வகைக்கு 375 சீட்களும், மீதி 635 மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் பகிர்ந்து கொள்ளப்படும்.

பல் மருத்துவக்கல்லூரி : தமிழகத்தில் ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி உள்ளது. இதில் 100 சீட்களில் 15 சதம் ஆல்இந்தியா கோட்டாவின்படியும், மாநில அரசுக்கு 85 சதமும் பிரித்து சேர்க்கை நடக்கும். தனியார் பல் மருத்துவக்கல்லூரி மொத்தம் 17 உள்ளது. இதில் ஆயிரத்து 420 சீட்களில் 529 மானேஜ்மென்ட் கோட்டாவும், மாநில அரசு கோட்டா 891 சீட்டும் பகிரப்படும்.

இவ்வாறு ஷீலா தெரிவித்தார்.

மே மாதம் 14ம் தேதி, பிளஸ் -2 விற்கான தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *