புதுடில்லி : “சாந்தி பூஷன் தொடர்புடைய, “சிடி’ உண்மையானது தான். போலியாக தயாரிக்கப்பட்டது அல்ல’ என, அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு ஆய்வகத்தில் நடந்த சோதனையில், “இது போலியாக தயாரிக்கப்பட்ட, “சிடி’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் சர்ச்சை தொடர்கிறது.
லோக்பால் வரைவு மசோதா குழுவில், பொதுமக்கள் தரப்பில் இடம் பெற்றுள்ள சட்ட நிபுணர் சாந்தி பூஷன் தொடர்பாக, சமீபத்தில் ஒரு, “சிடி’ வெளியிடப்பட்டது. அதில், முலாயம் சிங் யாதவ், அமர் சிங் ஆகியோருடன், சாந்தி பூஷன் பேசுவது போன்ற ஒலிப்பதிவு இடம் பெற்றிருந்தது. நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குறித்த உரையாடல் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாந்தி பூஷன், இதை கடுமையாக மறுத்தார்.
இதையடுத்து, அந்த, “சிடி’ உண்மையானது தானா என்பது குறித்து ஆய்வு செய்தற்காக, அரசு நடவடிக்கை எடுத்தது. அரசுக்கு சொந்தமான மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில், ஆய்வு நடத்தப்பட்டது. இதில், “சர்ச்சைக்குரிய இந்த, “சிடி’ உண்மையானது தான். உரையாடலில், தொடர்ச்சி இருக்கிறது. உரையாடலின் இடையில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதுபோல், உரையாடலின் எந்த ஒரு பகுதியும் நீக்கப்படவும் இல்லை. “சிடி’யில் உள்ள பின்புல குரலும், உண்மையானது தான்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சாந்தி பூஷன் தரப்பில் ஒரு ஆய்வகத்தில், “சிடி’ குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வக இயக்குனர் எஸ்.ஆர்.சிங் கூறுகையில், “அந்த “சிடி’, போலியாக தயாரிக்கப்பட்டது தான். உரையாடலில், இடைவெளி இருக்கிறது. எலக்ட்ரானிக் முறையில், “எடிட்’ செய்யப்பட்டுள்ளதற்கான அடையாளமும் உள்ளது’ என்றார்.
முரண்பட்ட இந்த ஆய்வக முடிவுகளால், “சிடி’ விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. இதுகுறித்து, சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர் சிங் கூறுகையில், “அரசு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில், சாந்தி பூஷன் பேச்சு உண்மையானது தான் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, லோக்பால் வரைவு மசோதா குழுவில் இருந்து, சாந்தி பூஷன் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.
Leave a Reply