மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்து புகார் தொடர்பான வழக்கிலிருந்து, விடுவிக்கக்கோரிய மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
மேலூர் அருகே அம்பலக் காரன்பட்டியில் வல்லடிக்காரர் கோயிலில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் தி.மு.க.,வினர் கூட்டம் நடத்துவதாக கிடைத்த தகவல் அடுத்து, தேர்தல் அதிகாரியான மேலூர் தாசில்தார் காளிமுத்து அங்குசென்றார். கூட்டத்தை தேர்தல் கமிஷன் வீடியோகிராபர் படம் எடுத்தார். அப்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக காளிமுத்து புகார்படி, அழகிரி, துணை மேயர் மன்னன், திருஞானம், ரகுபதி மீதுபோலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், புகாரை காளிமுத்து மறுத்தார். இவ்வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி அழகிரி உட்பட நான்கு பேரும் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். பின், அழகிரியை தவிர ஏனையோர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இம்மனு நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி உத்தரவு: முதல் தகவல் அறிக்கைக்கும், சம்பவம் நடந்ததற்கும் ஒத்துப்போகிறது. இச்சூழ்நிலையில் புகாரை தாசில்தார் மறுத்தாலும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய இயலாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என, உத்தரவிட்டார்.
Leave a Reply