வீல் சேரில் டெல்லி சென்று சீட் வாங்கும் கருணாநிதி’-பிரேமலதா

posted in: அரசியல் | 0

காரைக்கால் & திருக்கோவிலூர்: மக்களை ஏமாற்றும் குணம் காங்கிரசுக்கு கைவந்த கலை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

புதுவை மாநிலம் காரைக்காலில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில், புதுவை மாநில காங்கிரஸ் அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. குறிப்பாக, காரைக்காலில் மருத்துவமனை இருந்தும், எந்த வசதிகளும் இல்லை. புதுவையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.

மீனவர்கள் நலனில் அக்கறையில்லாமல் செயல்படும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சரியான பாடம் புகட்டுங்கள்.

மக்களை ஏமாற்றும் குணம் காங்கிரசுக்கு கைவந்த கலை. இதேபோன்றுதான் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளும். எனவே, தேமுதிகவை நம்புங்கள்.
புதுவை முதல்வராக இருந்து ரங்கசாமி ஆற்றிய பணிகளை இந்த மாநில மக்கள் மறக்கவில்லை என்பதை பிரசாரத்தின் போது அறிந்தேன். மீண்டும் அவர் முதல்வராகும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் விஜயகாந்த்.

கெட்டப்பெயர் ஏற்படுத்த சதி:

முன்னதாக நாகை மாவட்டம் நாகூரில் விஜயகாந்த் பேசுகையில்,

அதிமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் டி.வி அரசுடைமையாக்கப்படும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால் தங்கள் வருமானம் போய் விடும் என்று என பயந்து கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் என்னைப் பற்றி தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மீனவர்களை ஏன் இலங்கை கடற்படை கொல்கிறது என்பதை தட்டி கேளுங்கள் என்றால் சோனியா காந்தி கேட்டாரா? தமிழக, மத்திய அரசின் ரோந்து படை என்ன செய்கிறது?.

இந்த தேர்தலில் எனக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சதி செய்கிறார்கள். என்னைப் பற்றி தப்பு, தப்பாக பிரசாரம் செய்கிறார்கள். நடிகர், நடிகைகளை மிரட்டி அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எது முக்கியம் என்று எனக்கு தெரியும். எனக்கு கூட்டம் வருவதை அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. நான் ஆசைப்பட்டால் ஆட்சியில் பங்கு கேட்டு இருக்கலாம். ஆனால், எதையும் விரும்பாதவன் தான் இந்த விஜயகாந்த்.

விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் போட்டி ஏன்?-பிரேமலதா:

இந் நிலையில் திருக்கோவிலூரை அடுத்த பகண்டை கூட்ரோட்டில் ரிஷிவந்தியம் தொகுதி தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா,

கடந்த 20 நாட்களாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தேர்தல் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, அவருடைய தொகுதியில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்க இருக்கிறார். அதிமுக, தேமுதிக கூட்டணி மக்கள் விரும்பிய கூட்டணி. ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுகிறார் என்றதும் எங்கள் வீட்டுக்கு அதிகம் பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரிஷிவந்தியம் தொகுதி எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள்.

இன்றைக்கு ஏன் விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால், அவரும் கிராமத்தில் பிறந்தவர் என்பதுதான் காரணம். கிராமங்கள் என்றைக்கு முன்னேறுகிறதோ அன்றைக்குத்தான் தமிழகம் முன்னேறும் எனக் கூறும் விஜயகாந்த்,ரிஷிவந்தியம் தொகுதியை எல்லா விதத்திலும் முன்னேற்ற, தமிழகத்தில் ஒரு முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவதை லட்சியமாகக் கொண்டு இங்கு போட்டியிடுகிறார்.

இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் நானும், விஜயகாந்தும் நேரடியாக வந்து மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரிக்க உள்ளோம். நான் வந்து அவருக்கு ஓட்டுக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இந்தத் தொகுதியின் மாப்பிள்ளை அவர்.

இந்தத் தொகுதியின் மாப்பிள்ளையாக அவரை ஏற்றுக்கொண்டு அவரை வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

முன்னதாக செஞ்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவலிங்கத்தை ஆதரித்து அவர் பேசுகையில், நமது கூட்டணியினர் யாரையும் திட்டி ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. விஜயகாந்த், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்பவர்.

தமிழ்நாட்டில் வன்முறை, கட்டப் பஞ்சாயத்துப் பெருகிவிட்டது. நமது கூட்டணி வெற்றி பெற்றவுடன் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்களுக்கு நிம்மது அளிப்பதே முதல் வேலை.

கருணாநிதி பதவிதான் முக்கியம் என்று கருதினார். வீல் சேரில் டெல்லிக்குச் சென்று சீட் வாங்கி வருகிறார். ஆனால் இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுக்க டெல்லிக்குச் சென்றதில்லை.

கருணாநிதி தமிழ்நாட்டு மக்கள் முன் நடிக்கின்றார். சினிமாவில் மட்டுமே ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் நடிக்கத் தெரியும், தமிழக மக்கள் முன் நடிக்கத் தெரியாது.

கிரிக்கெட்டில் எதிரணியான இலங்கை அணியை நம் அணி ஓட ஓட விரட்டியடித்து உலகக் கோப்பையை வாங்கியது. அதே போல் எதிர் அணியும், எதிரி அணியுமான பாமக, திமுகவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். உலகக் கோப்பையைக் கேப்டன் தோனி வாங்கிக் கொடுத்தார். நமது கூட்டணி வெற்றிக் கோப்பையை கேப்டன் விஜயகாந்த் பெற்றுத் தருவார்.

சென்றத் தேர்தலில் உங்கள் கையில் இட்ட கரும்புள்ளி திமுகவை பெரும்புள்ளியாக்கி விட்டது. இந்தத் தேர்தலில் உங்கள் கையில் வைக்கும் கரும்புள்ளியால் திமுக கூடடணியை கரும்புள்ளி, செம்புள்ளி வைத்து நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றார் பிரேமலதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *